மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: மேயர் வழங்கினார்
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், வழங்கினார்.
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு, பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் (14.02.2023) வழங்கினார்கள்.
இந்தியாவில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி ஒரு வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 68 சதவீதம் குழந்தைகளுக்கு குடற்புழு தொற்று இருப்பதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடற்புழு தொற்றானது மோசமான சுற்றுப்புற சுகாதாரத்தினாலும் முறையான கழிப்பறையை பயன்படுத்தாத காரணத்தினாலும் உருவாகின்றன.
இந்த குடற்புழுக்களால் குழந்தைகளுக்கு இரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு, மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தையினுடைய உடல்நலத்தை பாதிக்கின்றன.
மத்திய அரசு மேற்கண்ட குறைபாட்டை தவிர்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தினமாக அனுசரித்து வருகிறது. இன்றைய தினம் (14.02.2023) ஒரு வயது முதல் 19 வயதுக்குப்பட்ட அனைவருக்கும் மற்றும் 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மட்டும் அல்பென்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் 106 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும்
149 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 346 தனியார் பள்ளிகளிலும் 23 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் 19 தனியார் கல்லூரிகளிலும், 675 அங்கன்வாடி மையங்களிலும், 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 155 பகுதிகளிலும் என, மொத்தம் 1504 மையங்களில் 423722 குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கும் 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட 125779 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
இந்த குடற்புழு நீக்க மாத்திரையால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது. இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகை தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடற்வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 549501 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட நபர்களுக்கு (21.02.2023) செவ்வாய்கிழமை அன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். முன்னதாக, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியினை, மேயர் ஆணையாளர் ஆகியோர் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.அர்ஜீன்குமார், உதவி ஆணையாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உதவி நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீகோதை, மண்டல மருத்துவ அலுவலர் மரு.சாந்தி சுகாதார ஆய்வளர் கவிதா மருத்துவ குழுக்கள் மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.