மதுரை அருகே பலத்த மழை: சாலையில் பெருக்கெடுத்த மழை நீர்..!
மதுரை மாவட்டத்தில் திடீரென பெய்த பலத்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரை:
மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் இன்று மாலை திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில், பல கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவியது. கிராமங்களில் ஆங்காங்கே சிறிய அளவில் மழை பெய்தாலும், மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் பகல் நேரங்களில் கடுமையான வெப்ப நிலவி வந்தது.
இரவிலும் கடுமையான வெப்பநிலை காணப்பட்டது. அதை தணிக்கு வகையில், இன்று மாலை திடீரெனெ கருமேகங்கள் சூழ்ந்தன. மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், தேனூர், சமயநல்லூர், தென்கரை, குருவித்துறை, திருமங்கலம், திருப்பரங்குன்றம், கருப்பாயூரணி, மேலக்கால், அச்சம்பத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சோழவந்தான் நகரில் பலத்த மழையால், சோழவந்தான் மாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் கால்வாய் பெருக்கெடுத்து, சாலையிலே குளம் போல தேங்கியது. அதேபோல, சோழவந்தான் அய்யவார் பொட்டலில் காமராஜ் சிலை அருகையும் சாலையிலே மழைநீர் தேங்கியது.
இதை ,பேரூராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொண்டு சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற முன்வர வேண்டுமென இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பகலில் வெளுத்து வாங்கிய வெயிலால் பாதிக்கப்பட்டிருந்த மதுரை மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை பெய்த பின்னர் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.
காற்று வீசியதால் மழை சிறிது நேரத்தில் நின்றுவிட்டது. காற்று வீசாமல் இருந்திருந்தால் மழையும் நின்று பெய்திருக்கும் என இப்பகுதி மக்கள் கூறினார்கள்.