பலத்த மழையால் நெற்பயிர் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
தென்கரை, ஊத்துக்குளி பகுதியில் கோடை மழையால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் நிவாரணம் வழங்க கோரிக்கை
தென்கரை, ஊத்துக்குளி பகுதியில் கோடை மழையால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை, ஊத்துக்குளி பகுதியில் தென்கரை கண்மாய் பாசனம் மூலம் நெல் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.இந்நிலையில்கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையின் காரணமாக சுமார் 300 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்ய முடியாமல் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் ,விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதனால், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து, ஊத்துக்குளி விவசாயி ராமலிங்கம் கூறும்போது:பருவநிலை மாற்றம் காரணமாக பருவம் தவறி பெய்யும் மழையின் காரணமாக தற்போது ,தென்கரை கண்மாய் பாசனம் மூலம் விளைவித்த நெல் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது.மேலும், தென்கரை கண்மாய் பகுதியில் விவசாயத்திற்கு தேவையான போது தண்ணீர் திறக்காமல் தேவை இல்லாத போது தண்ணீர் திறப்பதால் இதுபோன்ற சூழ்நிலை உள்ளது.இதனை கருத்தில் கொண்டு, அரசு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார்.