சோழவந்தான் அருகே நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் மறியல்

அரசாங்கத்தை நம்பி சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து வைத்துள்ளனர்

Update: 2021-10-22 08:00 GMT

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் நெல்கொள்முதல் செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

சோழவந்தான் அருகே கருப்பட்டியில் தொடர் மழையால் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி, இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், நாச்சிகுளம் , பொம்மன் பட்டிஉள்ளிட்ட கிராமங்களுக்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இந்தப்பகுதி விவசாயிகளால் வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் அரசு கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து வீணாகி வருவதாகவும் கொள்முதல் செய்த நெல்லை ஈரப்பதம் உள்ளதாக கூறி திருப்பி அனுப்பியதாகவும் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, விவசாயி கூறுகையில்,  அரசாங்கத்தை நம்பி சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து வைத்துள்ளோம். கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி வருவதாகவும், அதிகாரியிடம் பலமுறை சென்று முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட நெல் மூட்டைகளையும் ஈரப்பதம் இருப்பதாக கூறி திருப்பி அனுப்புகின்றனர். இதனால், எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால், முளைத்து வீணாகி வருவதாகவும் இரண்டு நாட்களுக்குள் கொள்முதல் செய்யப்பட வில்லை என்றால், விவசாயிகளை ஒன்றிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் கூறினர்.

Tags:    

Similar News