ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது காளை தங்க காசு பரிசு வெல்ல விரும்பும் தம்பதி
புதுமணத் தம்பதியருக்கு அவர்களின் திருமண சீர் வரிசையாக இருவீட்டார் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு காளை பரிசாக வழங்கப்பட்டது.;
அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக தாங்கள் வளர்க்கும் காளை மாடு தங்க காசு பெற வேண்டுமென புதுமணத் தம்பதியர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை போது லட்சுமி இவரது மகன் அஜய். இவருக்கும் திருவேடகம் கிராமத்தை சேர்ந்த மருகாத்துரை- மச்சக்கன்னி தம்பதியரின் மகள் புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புதுமணத் தம்பதியருக்கு அவர்களின் திருமண சீர் வரிசையாக இருவீட்டார் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு காளை பரிசாக வழங்கப்பட்டது. அதனை, புதுமண தம்பதிகளான அஜய்- புவனேஸ்வரி வளர்த்து வருகிறார்கள்.
தங்களின் முன்னோர்களின் கூற்றுப்படி காளையை முறையாக பராமரித்து வளர்த்து வருவதாக தம்பதியினர் கூறுகின்றனர். மேலும், எதிர்வரும் பொங்கல் தினத்தையொட்டி நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தங்கள் காளை மாடு சிறப்பாக செயல்பட்டு பரிசு வாங்க காத்திருப்பதாகவும் அதுவே தங்கள் விருப்பமாகவும் கூறுகின்றனர். இதற்காக, தங்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு முறையாக நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி அளித்தோம் அத்தியாவசியமான உணவு வகைகளையும் கொடுத்து தங்களின் குழந்தை போல் பார்த்து வருவதாகவும் கூறுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வாங்கினால் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறுகின்றனர். மேலும், நாட்டு மாடுகளை மட்டும் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கும் அரசின் முடிவை வரவேற்பதாக தெரிவிக்கின்றனர்.