அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடக்கம்
காளைகளுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் , ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை எடுத்து வந்து மருத்துவரிடம் காண்பித்தனர்;
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளையை பரிசோதித்து சான்றிதழ் வழங்கிய மருத்துவர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான உடல் பரிசோதனையை கால்நடைத்துறையினர் தொடங்கியுள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற 15 தேதியும், அலங்காநல்லூரில் 16- தேதியும் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு உடற்தகுதி பரிசோதனை அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் இன்று தொடங்கியது. கால்நடை உதவி மருத்துவர் நவநீதகண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்தனர்.
இதில், நாட்டு காளை மாடுகள் மட்டுமே அனுமதிக்கபடும். திமிலின் அளவு, வயது மூன்றரை, நான்கு பற்கள் உடையது, மாட்டு கொம்புகள் இரண்டுக்கும் நடுவில் குறிப்பிட்ட அளவு இருக்கிறதா எனவும் பரிசோதனை செய்தனர். மேலும், நாட்டு மாடுகள் இல்லாததை தகுதி நீக்கம் செய்தனர். மாட்டின் முதுகில் தழும்புகள் ஏதேனும் இருக்கிறதா எனவும் பரிசோதனை செய்தனர்.
காளை வளர்ப்பவர்கள் காளைகளுடன் சேர்ந்து நின்ற புகைப்படம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவை கொண்டு வந்து மருத்துவரிடம் சமர்ப்பித்தனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, காளைகள் துன்புறுத்தலை தடுக்கவும் காளை உரிமையாளர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழை வழங்கினர். இந்த பரிசோதனை முகாமானது, இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது. தகுதியுள்ள காளைகளுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.