மதுரை சித்திரைப்பெருவிழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
மதுரை சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.அனீஷ் சேகர் முன்னிலையில், நடைபெற்றஇக்கூட்டத்தில், அமைச்சர்கள் தெரிவித்ததாவது:-
மதுரை மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான சித்திரைப் பெருவிழா அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 04.04.2022-அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இப்பெருவிழா நடைபெறாமல் இருந்தது. கொரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து நடப்பாண்டில் இப்பெருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 14.04.2022-அன்றும், அருள்மிகு கள்ளழகர் திருக்கோலத்தில் எதிர்சேவை 15.04.2022-அன்றும், வைகை ஆற்றில் எழுந்தருளல் 16.04.2022-அன்றும் முறையே நடைபெற உள்ளது. இச்சிறப்பு நிகழ்வுகளை பொதுமக்கள் சிரமமின்றி கண்டு மகிழ 20 முக்கிய பொது இடங்களில் LED திரை மூலம் காட்சிப்படுத்திடவும், இணையதளத்தில் நேரடியாக கண்டு களித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு எழுந்தருளும் ஒவ்வொரு இடங்களையும் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், காவல்துறையின் "TRACK AZHGAR" என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் GPS முறையில் பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இப்பெருவிழாவில் பங்கேற்கும் பொதுமக்கள் நலனுக்காக போதிய குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் மூலம் பணிகளை ஒருங்கிணைக்க உதவி ஆணையர் நிலை அலுவலர் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1,500 தூய்மைப்பணியாளர்கள் சுகாதாரப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 15 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 4,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் தேவைக்கேற்ப பேரிகார்டு தடுப்புகள் அமைத்திடவும், வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்தை கண்காணித்திட காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடம், தல்லாகுளம், கள்ளந்திரி ஆகிய பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அருள்மிகு கள்ளழகர் ஊர்வலம் வரும் வழிகளை முறையே கண்காணித்து தாழ்வான நிலையில் மின் விநியோக கம்பிகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். அதேபோல, சாலையில் இடையூறு ஏதும் இல்லாத வகையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும்போது ஆற்றில் போதிய அளவு தண்ணீர் திறந்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முறையே பின்பற்றிட வேண்டும். உலகளவில் பெருமை வாய்ந்த சித்திரைப் பெருவிழாவை மிகச்சிறப்புடன் நடத்திட அனைத்துத்துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புணர்ந்து பணியாற்றிட வேண்டும் எனக் கூறினர்.
இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் .வெங்கடேசன் (சோழவந்தான்) , பூமிநாதன் (மதுரை தெற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் .சக்திவேல் , அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் செல்லத்துரை , அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) .அனிதா அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.