தாழ்தள வசதியுடன் கூடிய புதிய பேருந்துகளை இயக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி

மதுரையில் புதிய தாழ்தள வசதியுடன் கூடிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மூர்த்தி இயக்கி வைத்தார்.

Update: 2024-10-18 09:30 GMT

மதுரை எம்ஜிஆர்  பஸ் நிலையத்தில் தாழ்தள வசதியுடன் கூடிய புதிய பேருந்து சேவையை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மதுரை மண்டலம் சார்பாக ரூ.20 கோடி மதிப்பிலான 20 புதிய தாழ்தள பேருந்துகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கொடியசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மதுரை டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (18.10.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை மண்டலம்) சார்பாக ரூ.20 கோடி மதிப்பிலான 20 புதிய தாழ்தள பேருந்துகளை கொடியசைத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர், வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக 2022-2023 மற்றும் 2023-2024-ஆம் ஆண்டிற்கான அரசு நிதியில் 2,000 புதிய பேருந்துகளும், 2024-2025-ஆம் ஆண்டிற்கான அரசு நிதியில் 3,000 புதிய பேருந்துகளும், ஜெர்மன் நிதி மூலம் 2,666 பேருந்துகளும் என மொத்தம் 7,666 பேருந்துகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் மதுரை கோட்டத்திற்கு அரசு நிதியின் மூலம் ஒதுக்கப்பட்ட மொத்த பேருந்துகளில் மதுரை கோட்டத்திற்கு 683 பேருந்துகளும், ஜெர்மன் நிதி மூலம் ஒதுக்கப்பட்ட மொத்த பேருந்துகளில், மதுரை கோட்டத்திற்கு 473 பேருந்துகளும் என மொத்தம் 1,156 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2022-2023-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை இதுவரை ரூ.158.39 கோடி மதிப்பீட்டில் 371 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

மேலும், பயணிகள் எளிதாக பயணம் செய்வதற்கு ஏதுவாக பயணிகள் பாதுகாப் பிற்காக தானியங்கி கதவுகள், தானியங்கி கதவுகளை மூடினால் மட்டுமே பேருந்தை நகர்த்த முடியும்படியான வடிவமைப்பு, வயது முதிர்ந்தோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏறி இறங்க எளிதாக இருக்கும் படி தாழ்தளம் அமைப்பு, பேருந்து நிறுத்தங்களில் தாழ்தளத்தின் உயரத்தை இடதுபுறத்தில் 60 மில்லி மீட்டர் அளவில் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்கும்படி Kneeling வசதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பயணிகள் வரப்போகும் பேருந்து நிறுத்தத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் ஒலி மற்றும் காட்சி மூலம் தெரிவிக்கும் (LED DISPLAY BOARD) வசதி, பயணிகளுக்கு அறிவிப்பை வெளியிட ஒலி பெருக்கி, மேம்படுத்தப்பட்ட அகலமான குஷன் இருக்கைகள் வசதி, பயணிகள் வசதியாக பயணம் செய்ய இடவசதி அதிகரிப்பதற்காக பேருந்தின் நீளம் 12 மீட்டர் அளவில் வடிவமைப்பு, காற்றோட்ட வசதி அதிகரிக்க அகலமான ஜன்னல்கள் உள்ளிட்ட வசதிகளுடன் தாழ்தளப் பேருந்து (BS VI) வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணம் செய்வதற்கு ஏதுவாக, மாற்றுத்திறனாளிகள் முன் மற்றும் பின் படிக்கட்டு வழியாக எளிதில் ஏறி, இறங்குவதற்காக 400 மில்லி மீட்டர் அளவில் தாழ்தள வசதி, மாற்றுத்திறனாளிகளின் வீல்சேர் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் சாய்தளம் வசதி, மாற்றுத்திறனாளிகள் பேருந்தினுள் வீல் சேருடன் அமர்ந்து பிரயாணம் செய்ய வசதியாக தனி இடவசதி உள்ளிட்ட வசதிகளுடன் தாழ்தளப் பேருந்து (BS VI) வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள் சாலையில் முழு கவனத்துடன் பேருந்தை இயக்க ஏதுவாக ஓட்டுநர் கேபின் வசதி, பேருந்தை பின்னோக்கி செலுத்தும் போது பாதுகாப்பாக இயக்க (Rear View Camera) வசதி, ஓட்டுநருக்கு மேம்படுத்தப்பட்ட குஷன் இருக்கைவசதி, பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டுநருக்கென,தனி மின்விசிறி வசதி, பின்பக்கம் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால் ஓட்டுநருக்கு இஞ்சின் இரைச்சல் மற்றும் வெப்பம் முற்றிலும் தடுக்கப்பம் வசதி, பேருந்தை எளிதாக இயக்கும் வண்ணம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி, சிறப்பம்சங்களை இயக்கக் கூடிய சுவிட்சுகள் பொருந்திய புதிய வடிவிலான (Dash Board) வசதி, பேருந்தின் முன்புறம் ஓட்டுநர்பார்வை மறைக்கும் இடத்தை கவனிக்க (Blind Spot Mirror) வசதி உள்ளிட்ட வசதிகளுடன் தாழ்தளப் பேருந்து (BS VI) வடிவமைக் கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் பாதுகாப்புடன் பயணம் செய்வதற்கு ஏதுவாக என்ஜினில் கூடுதல் வெப்பம் காரணமாக தீப்பற்றக் கூடிய சூழ்நிலை வந்தால் அணைப்பதற்கு Sensor உடன் கூடிய (Fire Safety Nozzle Engine) மேல் பகுதி, அவசர காலங்களில் பயணிகள் எளிதில் வெளியேற மேற்கூரையில் அவசரகால வழி (Emergency Hatchet) உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தாழ்தளப் பேருந்து (BS VI) வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை மண்டலம்) சார்பாக ரூ.20 கோடி மதிப்பிலான 20 புதிய தாழ்தள பேருந்துகள் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகள், மதுரை மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) , மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழக (மதுரை மண்டலம்) மேலாண்மை இயக்குநர் ஆர்.சிங்காரவேலு, மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிக்குமார், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News