நீதிமன்ற வாசலில் கைதிக்கு போதை மாத்திரை வழங்கிய வாலிபர் கைது
விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கைதியிடம் போதை மாத்திரையை பரிமாறிய வாலிபரை கைது செய்யப்பட்டார்
விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கைதியிடம் போதை மாத்திரையை பரிமாறிய வாலிபரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்காக அவ்வப்போது கைதிகளை காவல்துறையினர் பலத்த பாதுகாப்போடு அழைத்து வருவது வழக்கம்.இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக மாரிமுத்து உள்ளிட்ட 5 கைதிகளை இரண்டாம் நிலை காவலரான காந்தி என்பவர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை முடித்துவிட்டு கைதிகளை அழைத்துக்கொண்டு நீதிமன்ற வாசலில் இருந்து வெளியே செல்லும் போது, கைதி மாரிமுத்துவுக்கு மதுரை மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபரான சிந்தனைச்செல்வன் கூட்ட நெரிசலை பயன்படுத்தி போதை மாத்திரைகளை மாரிமுத்துவின் கையில் கொடுத்துள்ளார்.
இதனைக் கவனித்த காவலர் காந்தி நீதிமன்ற வளாகத்திலேயே வாலிபரை கையும் களவுமாக பிடித்து அவர் கொடுத்த பத்து போதை மாத்திரைகளையும் கைப்பற்றினார்.இதனைதொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அண்ணாநகர் காவல்துறையினர் சிந்தனைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.