மதுரை அருகே பஸ் நின்று செல்லக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அனைத்து பஸ்களும் நின்று போக வேண்டி பலமுறை போக்குவரத்து துறைக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்;

Update: 2023-04-09 12:30 GMT

15.பி மேட்டுப்பட்டி, ஸ்ரீபுரம் ராஜேஷ் நகர் பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் .

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள 15.பி மேட்டுப்பட்டி ஊராட்சி பகுதியில், உள்ள ஸ்ரீபுரம் ராஜேஷ் நகர் பகுதி மக்கள் அப்பகுதியில் அனைத்து பஸ்களும் நின்று போக வேண்டி பலமுறை போக்குவரத்து துறைக்கு தெரிவித்தும் பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் 50 க்கு மேற்பட்டோர் அலங்காநல்லூர் ஊமச்சிகுளம் சாலையில் திரண்டு வந்து  சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் தீபாநந்தினி மயில்வீரன் பேச்சுவார்த்தை நடத்தி ,விரைவில் பஸ் நின்று செல்ல வழிவகை செய்யப்படும் என்று உறுதி கூறியதன் பின்பு, சாலை மறியல் கைவிடப் பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பேருந்துகள் இயக்கப்படுவதற்கான அடிப்படை நோக்கம் என்பது பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காகத்தான். இதில், பெரும்பாலான நேரங்களில் நகரப்பேருந்துகள் வராததால், அப்பகுதியில் செல்லும் அனைத்து பேருந்துகளில் ஏறிச்செல்ல வேண்டிய நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் விரும்பும் பேருந்துகளில் ஏறிச்செல்வது எட்டாக்கனியாக மாறிவிடுகிறது.

தங்கள் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் முதல் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் வரை கோரிக்கை மனு அளிக்கின்றனர். இக்கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிகளை அரசு நிர்வாகம் எடுப்பதில் ஏற்படும் கால தாமதம் மற்றும் புறக்கணிப்புகளால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் மக்கள் வெகுண்டெழுந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால் இது போன்ற போராட்டங்களால் பலதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர் என்பதே நிதர்சனம்.

Tags:    

Similar News