கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: 3 பேர் கைது
மதுரை மாவட்டம், மேலூரில் நள்ளிரவில் 2.50 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது;
மதுரை அருகே திமிங்கிலத்தின் எச்சத்தை கடத்தியபோது போலீஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று பேர்
மதுரை பல கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்
மதுரை மாவட்டம், மேலூரில் நள்ளிரவில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், மேலூர்-சிவகங்கை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக திமிங்கலத்தின் எச்சத்தை கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் ரூபாய் பத்தாயிரம் ரொக்கம் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலூர்-சிவகங்கை சாலையில், நள்ளிரவில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் நாகநாதன் தலைமையிலான போலீஸார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சிவகங்கையிலிருந்து நத்தத்திற்கு காரில் வந்த அழகு, பழனிசாமி, குமார் உள்ளிட்ட மூன்று நபர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், உடனடியாக மேலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, திமிங்கலத்தின் எச்சத்தினை கள்ளத்தனமாக விற்பனை செய்ய வந்ததாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கிலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் ரொக்கப்பணம் பத்தாயிரத்தை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி குற்றமானது வனச் சட்டத்தின்கீழ் வருவதால், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் எதிரிகளையும் வனத்துறையிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.