மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
புற்றுக்கட்டியை அகற்றுவதற்கு ரோபோ உதவியுடன் செய்யப்படும் கல்லீரல் அறுவைசிகிச்சைக்கு, உலகளவில் முதன்மை வகிக்கும் டா வின்சி சர்ஜிக்கல் ரோபோவை மீனாட்சி மிஷன் மருத்துவமனை பயன்படுத்துகிறது.
தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக 65 வயதான முதியவருக்கு ரோபோ உதவியுடன் கல்லீரல் அறுவை சிகிச்சையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக செய்து, புற்று நோய் கட்டியை அகற்றியிருக்கிறது.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, விரைவாக குணமடைந்த இந்நோயாளி வெறும் 5 நாட்களில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மருத்துவமனையின், குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறை மேற்கொண்ட பரிசோதனையில், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு பொருத்தமானவராக இந்நோயாளி இருப்பதாக கண்டறியப்பட்டது.
கல்லீரல்-கணைய அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஶ்ரீனிவாசன் ராமசந்திரன், குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். மோகன் மற்றும் மயக்கவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். என். மஹராஜன் ஆகியோர் தலைமையில் செயல்பட்ட இம்மருத்துவக் குழு, குறைவான ஊடுருவலுடன், ரோபோவின் உதவியுடன் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.
கல்லீரல் புற்றுநோய் என்பது இந்தியாவில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்களுள் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் கணிப்பின்படி நாட்டிலுள்ள 26.7 மில்லியன் புற்றுநோயாளிகளுள் சுமார் 5% நபர்கள், கல்லீரல் புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள்; அதாவது 1.3 மில்லியன் நபர்கள் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்லீரல் புற்றுநோயைப் பொறுத்தவரை அறுவை சிகிச்சையே அதிக பயனளிக்கும் சிகிச்சையாக பெரும்பாலும் இருக்கிறது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கல்லீரல் – கணைய (HPB) அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாசன் ராமச்சந்திரன் பேசுகையில், கல்லீரல் வடு / தழும்பு இறுதி நிலையிலுள்ள நபர்களுக்கு பொதுவாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. கல்லீரல் புற்றுநோய்களுக்கு அறுவைசிகிச்சையே ஒரே தீர்வாக இருக்கிறது. கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சைகளால் புற்றுநோயின் வளர்ச்சியை தாமதிக்க மட்டுமே இயலும்.
மேலும் அறுவை சிகிச்சைக்குப் பொருத்தமற்ற நோயாளிகளுக்கு மட்டுமே இச்சிகிச்சைகள் தரப்படுகின்றன. வழக்கமான, திறந்தநிலை அறுவைசிகிச்சைகளில் மீண்டு வருவதில் தாமதம், நீண்ட நாட்கள் மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் தேவை மற்றும் அதிக செலவுகள் ஆகிய பிரச்சனைகள் இருக்கின்றன.
ஆகவே, மிகக்குறைவான ஊடுருவலுடன், ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவைசிகிச்சையை நாங்கள் தேர்வு செய்தோம். இதற்கு தேவைப்படும் சிறப்பு நிபுணத்துவமும், மிக நவீன தொழில்நுட்பமும் (டா வின்சி அறுவைசிகிச்சை அமைப்பு) எங்களிடம் இருக்கின்றன. கீஹோல் அறுவைசிகிச்சை வழியாக மிக நுட்பமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ரோபோ எங்களுக்கு உதவுகிறது. அடிவயிற்றின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறிய கீறலை செய்து அகற்றப்பட வேண்டிய பகுதியினை எங்களால் அகற்ற முடியும்.
ரோபோ உதவியுடனான இந்த அறுவைசிகிச்சை அமைப்பு, அறுவைசிகிச்சை செய்யப்படும் இடத்தின் 3D காட்சியை பன்மடங்கு பெரிதாக்கி காட்டுகிறது; மேலும், துல்லியம், நெகிழ்வுத்திறன் மற்றும் கட்டுப்பாட்டுடன் அறுவைசிகிச்சை செய்ய மருத்துவருக்கு இது உதவுகிறது. இந்நோயாளிக்கு மிகக்குறைவான வலியே இருந்தது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு எந்த பிரச்சனைகளும் ஏற்படவில்லை. சில நாட்களுக்குள்ளாகவே இயல்பான வாழ்க்கைக்கு இந்நோயாளியால் திரும்ப முடிந்தது இந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சையின் சிறப்பை சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் தலைவரும், மருத்துவ இயக்குனருமான டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி பேசுகையில், அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துதல், அதிக உடற்பருமன், கொழுப்புள்ள கல்லீரல் நோய்கள் நேர்வு அதிகரித்தல், நீரிழிவு மற்றும் ஹெபடைடிஸ் பி அல்லது ஹெபடைடிஸ் சி வைரஸ் உடன் நாட்பட்ட தொற்று ஆகியவை திரும்பவும் சரிசெய்ய இயலாத அளவுக்கு கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும்; அத்துடன் கல்லீரல் புற்றுநோய்க்கான இடரையும் அதிகரிக்கும். கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப நிலைகளில் இதற்கான அடையாளங்களோ, அறிகுறிகளோ வெளியில் தெரியாது என்றாலும், நோய் வளர்ச்சி அடையும் போது நோயாளிகளின் உடல் எடையும், பசியுணர்வும் குறையத்தொடங்கும். வயிற்றின் மேற்புறத்தில் வலி, குமட்டல், வாந்தியெடுத்தல், அடிவயிற்று வீக்கம், சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை) போன்ற விளைவுகளும் இவர்களுக்கு ஏற்படக்கூடும். பலவீனம் மற்றும் அசதி இருப்பதோடு, இவர்களது மலத்தின் நிறம் வெள்ளையாக மற்றும் வெளிறிய நிறத்தில் இருக்கும்.
ஹெபடைடிஸ் பி அல்லது ஹெபடைடிஸ் சி தொற்றுள்ள நபர்கள், கல்லீரல் தொற்றுக்கான ஸ்க்ரீனிங் பரிசோதனையை ஆரம்ப நிலையிலேயே செய்துகொள்வது நல்லது. கல்லீரலில் கூடுதல் கொழுப்பு நிலை என்பது புற்றுநோய்க்கான மற்றொரு முக்கிய இடர் காரணியாகும். கொழுப்பு படிந்த கல்லீரல் என அழைக்கப்படும் இப்பாதிப்பால் இந்தியாவில் மூன்றில் ஒரு நபர் அவதிப்படுகிறார். ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆகியவை உடலிலும், கல்லீரலிலும் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்கு முக்கியமானது. ஹெபடைடிஸ் சி – க்கு எதிராக தடுப்பூசி மருந்து இல்லை. ஹெபடைடிஸ் பி தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன் வரவேண்டும். மேலும் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும்" என்று டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி மேலும் விளக்கமளித்தார்.
உணவுக்குழாய், வயிறு, கணையம், கல்லீரல், பித்தப்பை மற்றும் பிலியரி டிராக்ட் , சிறுகுடல் மற்றும் பெருங்குடல், ரெக்டம் மற்றும் ஆசனவாய் ஆகியவை தொடர்பான குடல், இரைப்பை சார்ந்த நோய்களின் மேலாண்மை மற்றும் சிகிச்சையை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறை மிகச்சிறப்பாக வழங்கி வருகிறது. இதன் மருத்துவக் குழுவினர் மற்றும் மிக நவீன தொழில்நுட்பங்களுக்காக சிறப்பான அங்கீகாரத்தை இத்துறை பெற்றிருக்கிறது.