நாகர்கோவில் பார் கவுன்சில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவ
மனுதாரர்கள் ஜாமீன் மனுவில் வழக்கறிஞர் ஆஜராக கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
ஜாமீன் வழக்கில் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக நாகர்கோவில் பார் கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஜய்சாரதி, துரைராஜ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், "நாங்கள் இருவரும் வழக்கறிஞரின் சகோதரரை தாக்கியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞரின் சகோதரர் என்பதால் எங்கள் ஜாமீன் மனுவில் வழக்கறிஞர் ஆஜராக கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம்." என குறிப்பிட்டிருந்தனர்..
இந்த மனு, நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தாக்கப்பட்டதாக கூறும் நபர் எந்த ஒரு மருத்துவமனையிலும் சிகிச்சை அளித்ததற்கான சாட்சியங்கள் இல்லை என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் நாகர்கோவில் பார் கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கு குறித்து, நாகர்கோவில் பார் கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் மற்றும் கன்னியாகுமரி தெற்கு தாமரைக்குளம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணைக்கு அழைக்கும் போது இருவரும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.