மேலூர் நகராட்சித் தலைவராக முகமது யாசின் பதவியேற்பு
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சித் தலைவராக முகமது யாசின் பதவியேற்றுக்கொண்டார்.;
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இதில் தி.மு.க 23 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், அ.தி.மு.க. 2 இடத்திலும், அ.ம.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றது.
மேலும், அ.தி.மு.க. சார்பில் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருண்சுந்தரபிரபு, வெற்றி பெற்ற சில நிமிடங்களிலேயே வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சரை சந்தித்து தி.மு.க.வில் இணைந்து கொண்டார். இதனால், அ.தி.மு.க.வின் நகர்மன்ற உறுப்பினர் எண்ணிக்கை 1-ஆக குறைந்தது.
இந்நிலையில், வெற்றி பெற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் மேலூர் நகராட்சி அலுவலகத்தில் பதவியேற்று கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, இன்று மேலூர் நகர்மன்றத்திற்கான தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று மேலூர் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையாளருமான ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இதில், ஹிஜாப் சர்ச்சை எழுந்த 8 வது வார்டு உறுப்பினரும், தி.மு.க. நகர் செயலாளருமான பொறியியலாளர் முகமதுயாசின் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரை எதிர்த்து நகர்மன்ற உறுப்பினர்கள் யாரும் போட்டியிடாததால், மேலூர் நகர்மன்ற தலைவராக முகமதுயாசின் போட்டியின்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல், அ.வல்லாளப்பட்டி பேரூராட்சியில் 7வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமரன் பேரூராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, மேலூர் நகர்மன்றத்திற்காண துணைத் தலைவர் பதவிக்கு, மேலூர் 14 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளஞ்செழியனும், அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவராக, அ.வல்லாளப்பட்டி 2 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலைவாணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.