மதுரை அருகே இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் மூர்த்தி
மதுரை அருகே இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.;
மதுரை மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், 11 வருவாய் வட்டங்களுக்குட்பட்டு மொத்தம் 5316 பயனாளிகளுக்கு இலவச பட்டா ஆணைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
மதுரை மாவட்டத்தில் , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (06.03.2024) பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , 11 வருவாய் வட்டங்களுக்குட்பட்டு மொத்தம் 5316 பயனாளிகளுக்கு இலவச பட்டா ஆணைகளை வழங்கினார்.
மாவட்டத்தில் உள்ள 11 வருவாய் வட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள விளிம்பு நிலை மக்கள், பட்டியலின பிரிவு மக்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 5316 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகள் வழங்கப்பட்டன. இதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், மதுரை கிழக்கு வட்டத்திற்குட்பட்ட ஆலாத்தூர், மேலூர், வாடிப்பட்டி, பேரையூர், திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , ஆலாத்தூர், மேலூர், வாடிப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேரடியாக பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச பட்டா ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ”எல்லோரும் எல்லாம்” பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, மகளிர் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் நோக்கில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் சுயதொழில் செய்து பொருளாதார சுதந்திரம் பெறும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற போது, தமிழ்நாட்டின் நிதிநிலை மிகுந்த நெருக்கடியில் இருந்தது. இருப்பினும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் எவ்வித தொய்வும் இருந்துவிடக் கூடாது என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பெண்களுக்கான விடியல் பயணத் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்கள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதுதவிர, அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வீடுகட்டி வசித்து வரும் தகுதியான ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கைகள் அரசு விதிகளின் படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள விளிம்பு நிலை மக்கள், பட்டியலின பிரிவு மக்கள், மாற்றுத் திறனாளிகள் ,மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச பட்டா ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை மாவட்டத்தில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து இலவசப் பட்டா ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வருவாய் வட்டங்களுக்குட்பட்டு மொத்தம் 5316 பயனாளிகளுக்கு இலவச பட்டா ஆணைகள் வழங்கப்படுகின்றன. இதில், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு மட்டும் 1300 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
குறிப்பாக, இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆதிதிராவிடர்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவசப் பட்டா ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், தகுதியான பயனாளிகளுக்கு இலவசப் பட்டா ஆணைகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் செயல்படும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) , மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தி , மேலூர் நகர்மன்றத் தலைவர் முகமது யாசின் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.