மதுரை அருகே மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய அமைச்சர் மூர்த்தி
மதுரை அருகே மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
மதுரை அருகே மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
மதுரை கிழக்கு வட்டம், ம.சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (29.07.2024) நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி 151 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள், மற்றும் பள்ளிகளுக்கு இலவச சீருடைகளை வழங்கினார்.
தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது
தமிழ்நாடு முதலமைச்சர், மாணவ, மாணவிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள வசதி வாய்ப்பற்ற மாணவ, மாணவிகள் பெரும்பான்மையாக அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி என்பது மிக அவசியம். கல்வியறிவு பெற்ற மாணவ, மாணவிகள் எந்தத் துறையானாலும் வெற்றி பெற்று சாதனை யாளர்களாக திகழ்வர். இதற்கு மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வி கற்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது, அவர்களை தொடர்ந்து, ஊக்கப்படுத்துவதும், நமது கடமையாகும். அந்த வகையில், தமிழ்நாடு அரசின் மூலம் மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பயண அட்டை திட்டம், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், விலையில்லா சீருடை, பாடப்புத்தகம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, ம.சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 94 மாணவர்கள், 57 மாணவிகள் என மொத்தம் 151 குழந்தைகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.அதேபோல, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப் படுகிறது
வழக்கமாக இல்லாமல் புதிய முயற்சியாக இந்த ஆண்டு பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை நேர்த்தியாக தைத்து கொடுக்கப்படும் என, அரசு அறிவித்திருந்தது. அதன்படியே, ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் மிடுக்காக செல்லும் வகையில் சீருடை அளவு எடுத்து தைத்து வழங்கப்பட்டுள்ளது. தனித்தனியாக அளவெடுத்து தைக்கப்பட்டுள்ளதால் , தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களின் உடையும் இருக்கும்.
இவ்வாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளின் போது மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.