மதுரைமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நாட்டின் முதலாவது மார்பக பெட் ஸ்கேன் கருவி
இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மார்பக பெட் ஸ்கேன் சாதனத்தை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தொடக்கி வைத்தார்
இந்தியாவின் முதல் மற்றும் மூலக்கூறு இமேஜிங் மார்பக பெட் ஸ்கேன் சாதனத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் முனீஷ்வர நாத் பண்டாரி தொடங்கி வைத்தார்.
மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கெனவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள "மூலக்கூறு இமேஜிங் உடன் கூடிய மேமோகிராஃபி" (MAMMI) என அழைக்கப்படும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மார்பக பெட் ஸ்கேன் வசதியை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஷ்வர நாத் பண்டாரி தொடங்கி வைத்தார். இத்தொடக்கவிழா நிகழ்வில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் எஸ். குருசங்கர் மற்றும் காமினி குருசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஷ்வர நாத் பண்டாரி ஆற்றிய உரையில், டாக்டர் குருசங்கர் ஆகியோரது முயற்சியினை பாராட்டினார். மேலும், இந்த MAMMI PET இன் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.
'மேமோகிராபி வித் மாலிகுலர் இமேஜிங்' (MAMMI) என்று அழைக்கப்படும் இந்த PET ஸ்கேன் பிரத்யேகமாக மார்பக புற்றுநோயைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டியானது 2 மிமீ அளவுக்கு சிறியதாக இருக்கும் போது கூட இதனால் கட்டியை கண்டறிய முடியும். இதன் மூலம் சீக்கிரம் சிகிச்சை அளிக்கப்பட்டு, நோயாளி விரைவில் குணமடைய முடியும்.
பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களுள் மிக பொதுவானதாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. 28 பெண்களுள் ஒருவருக்கு வரும் வாய்ப்புள்ளதாக மார்பக புற்றுநோய் இருக்கிறது. எனினும், மிக தாமதமாகவே பெரும்பாலும் இது கண்டறியப்படுவதால், நோய்பாதிப்பு மற்றும் உயிரிழப்பின் விகிதங்கள் அதிகமாக இருக்கின்றன. ஒரு மேமோகிராம் அல்லது CT அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் போன்றவற்றை விட, ஆரம்பத்திலேயே புற்றுநோய்க்கான செல்கள் உருவாவதை PET ஸ்கேனால் கண்டறிய முடியும். இருப்பினும், இன்று மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களில் முழு உடல் PET ஸ்கேன் மட்டுமே உள்ளது. மார்பக பரிசோதனைக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள MAMMI என்ற இப்பிரத்யேக PET ஸ்கேனால் 2 மி.மீ. அளவுள்ள திசுத்திரள் அல்லது கட்டி ஒருவருக்கு உருவாவதற்கு முன்பே கண்டறிய முடியும். இதற்கு மாறாக 10 மி.மீ. அளவுக்கு, அதாவது 2 மி.மீ. அளவுள்ள புற்றுநோய் 100 மடங்கு அதிகமாக வளர்ந்த நிலையில் மட்டுமே முழு உடல் PET சாதனத்தால் புற்றுநோய் கட்டியை கண்டறிய முடியும்.
ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கட்டியை அடையாளம் காணமுடியும் என்பதால், அதை குணப்படுத்துவதற்கான சிகிச்சையை உடனே தொடங்கலாம். மார்பகத்தை அகற்றுவதற்கான சிகிச்சை அல்லது அவசியமற்ற பிற துணை சிகிச்சைகள் இதனால் தவிர்க்கப்படும். கீமோதெரபிக்கு எந்த அளவிற்கு நோயாளிகளுக்கு சிகிச்சைப்பலன் கிடைக்கிறது என்பதையும் MAMMI PET ஆல் தெரிவிக்க முடியும்.
MAMMI PET என்பது, ஒரு எளிய, வலியற்ற பரிசோதனை; கதிரியக்க ட்ரேசரை ஒரே முறை ஊசி மூலம் செலுத்தும்போது மார்பகத்தின் 360-டிகிரி தோற்றப் படத்தை இது உருவாக்குகிறது. இதன் மூலம் சிறிய கட்டிகளும், நோய் இருக்கும் பகுதிகளும் விடுபடாமல் இருக்கும். மார்பக அழுத்தம் ஏதும் இல்லாமலேயே இத்தோற்றப் படங்கள் எடுக்கப்படுவதால் நோயாளிகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது. 30-40 நிமிடங்களுக்குள் இச்செயல்முறை நிறைவடையும். ஒவ்வாமைக்கான இடர்வாய்ப்பும் இதில் இல்லை.
தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் பேசுகையில், " சமீபத்திய மருத்துவத் தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவதற்கான முன்னோடி முயற்சிகளை எடுத்து வருவதன் மூலம் இந்தியாவின் சுகாதார வசதிகளில் தமிழகத்தின் நிலையை நம்மால் வலுப்படுத்த முடிகிறது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சிறந்த தொழில்நுட்பங்களை மக்களுக்காக கொண்டு வருவதில் முன்னோடியாக இருந்து வருகிறது.
குறிப்பாக தென் தமிழகத்தில் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள MAMMI PET இதற்கான சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இம்மாநிலத்தில், குறிப்பாக தென் தமிழகத்தில், புதிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதிலும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை முன்னோடியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டாம்நிலை நகரமான மதுரையில் உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய உயர் தொழில்நுட்பமும், தரமான சிகிச்சைகளும் கிடைக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது." என்று கூறினார். மேலும் டாக்டர் .குருசங்கரை பாராட்டி அவர் கடிதம் ஒன்றையும் வழங்கினார்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர். குருசங்கர், புற்றுநோய் சிகிச்சையில் இம்மருத்துவமனையின் முன்னோடித்துவ சிகிச்சைகள் பற்றி பேசுகையில், "புற்றுநோய்க்கான சிகிச்சையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய நோயறிதல் தொழில்நுட்பம் மற்றும் தரநிலையை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மருத்துவப் பலன்களோடு, நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றுவதில் மட்டுமின்றி, நமது மக்களுக்கு எளிய, செலவில் இது கிடைப்பதை உறுதி செய்வதிலும் நாங்கள் முதன்மை வகிக்கிறோம் என்று கூறினார்.
MAMMI PET எனப்படும் இந்த முறையால், தற்போதுள்ள வழக்கமான இமேஜிங் முறைகளான மேமோகிராம்கள், CT/MRI மற்றும் முழு-உடல் PET ஸ்கேன்கள் போன்றவற்றின் குறைபாடுகளை சமாளிக்க முடியும். அவற்றால் சிறிய புண்கள் மற்றும் நோய் இருக்கும் இடங்களை , குறிப்பாக அடர்த்தியான மார்பகங்களில் அடையாளம் காண முடியாது. மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிகள் மற்றும் சாத்தியமான அபாயங்களுக்கு வழக்கமான ஸ்கிரீனிங் தேவைப்படும் முன்னாள் நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். வடு மற்றும் ஃபைப்ரோஸிஸை உருவாக்குவதால், தற்போதுள்ள முறைகளை பயன்படுத்தி, துல்லியமான முடிவுகளை உருவாக்க முடியவில்லை. MAMMI PET முறையானது, இவற்றை எல்லாம் மாற்றுகிறது. நோயாளி படுத்திருக்கும் நிலையில் (Prone position) ஸ்கேன் செய்யப்படுவதால், இது ஊடுருவக் கூடியது அல்ல, பாதுகாப்பானது மற்றும் வலியற்றது. இது முழு உடல் PET இலிருந்து பால்ஸ் நெகடிவ் களையும் (false negatives) MRI இலிருந்து பால்ஸ் பாசிட்டிவ் களையும் (false positives) குறைக்கிறது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலர் பி. செந்தில்குமார், சென்னையிலிருந்து அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், புதுமையான, உலகத்தரத்திலான MAMMI PET வசதியை இந்தியாவில் முதன் முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிமுகம் செய்திருப்பது அளவிலா மகிழ்ச்சி தருகிறது. நவீன மருத்துவ சிகிச்சையின் உலகளாவிய வரைபடத்தில் தமிழ்நாடு இடம்பெறுவதை இத்தகைய முன்னோடித்துவ முயற்சிகள் உறுதிசெய்யும் என்று கூறினார்.