மதுரையில் தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம் திரளானோர் பங்கேற்பு
முகாமில் தேர்வான 616 பேருக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் பி. மூர்த்தி வழங்கி வாழ்த்தினார்;
மதுரை மாவட்டம், திருப்பாலை யாதவா மகளிர் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்று பேசியதாவது: அரசுத்துறையில் உள்ள பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வரும் நிலையில் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் வகையில், இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் இன்று திருப்பாலை யாதவா மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், சுமார் 140 நிறுவனங்களைச் சார்ந்த வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித் தேர்வு மூலம் அரசு வேலைவாய்ப்புப் பெற ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தன்னார்வப் பயிலும் வட்டம் தொடங்கப்பட்டு போட்டித் தேர்வகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு முக்கிய துறைகளான மோட்டார் வாகனம் கட்டுமானம் தோல் ஜவுளித் துறை வங்கி நிதி சேவை மருத்துவப் பணி பாதுகாப்பு சேவைகள்இ வாகனம் ஓட்டுதல் விருந்தோம்பல் தொலைதொடர்பு ஊடகத்துறை மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் திறன் எய்தும் பயிற்சிகள் இலவசமாக வழங்கபப்டுகின்றன.
இன்றைய சூழ்நிலையில் திறன் மேம்பாடு என்பது வேலைவாய்ப்ப பெற மிக முக்கிய தேவையாக இருப்பதால் இத்துறையின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாகப் பெற்று தங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு தமது திறனுக்கேற்ற வேலைவாய்ப்புகளைப் பெற்று வளமான எதிர்காலத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றார் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.பி.மூர்த்தி.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்சூரியகலா,மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) வெ.சுப்பிரமணியன் துணை இயக்குநர்(மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) என்.மகாலெட்சுமி,யாதவா மகளிர் கல்லூரி (முதல்வர்) முனைவர். இ.எம்.ஜி.எஸ்.புஷ்பலதா, யாதவா மகளிர் கல்லூரி (தலைவர்) முனைவர்.இ.எம்.ஜி.எஸ்.போத்திராஜா, மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வே.செந்தில்நாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.