மதுரையில் மனைவியின் நினைவாக தொடங்கப்பட்ட முதியோர் இல்லம்
மனைவியின் நினைவாக பிரபாகரன் என்பவர் திருவாதவூரில் ஏஞ்சல் தேவகி பிரபாகரன் பவுண்டேஷன் ஆதரவற்ற முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்
மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே உள்ள முக்கம்பட்டியில் 'ஏஞ்சல் தேவகி பிரபாகரன் பவுண்டேஷன் ஆதரவற்ற முதியோர் இல்லம்' ஒன்று அமைந்துள்ளது. இதன் உரிமையாளரும் நிர்வாக இயக்குனரும் பிரபாகரன் ஆவார். இவரின் மனைவி தேவகி 2010 ம் ஆண்டில் வாகன விபத்து காரணமாக மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, கருப்பாயூரணியில் முதியோர்களுக்கு உடை, உணவு மற்றும் இருப்பிடம் போன்ற அடிப்படை சேவைகளை செய்து வந்தார். பின்னர், இவரது மனைவி நினைவாக 2011 ல் முக்கம்பட்டியில் 'ஆதரவற்ற முதியோர் இல்லம்' ஒன்றினை துவங்கினார். அதற்கு இவரது மனைவி தேவகி பெயர் வைக்கப்பட்டது. இவர் மனைவி மீது வைத்துள்ள அன்பை இதனால் அனைவராலும் புரிந்து கொள்ள முடிந்தது.
இவர்தம் மனைவி நினைவாக முதியோர்களுக்கு சேவைசெய்து வரும் பிரபாகரனின் இரக்க குணத்தை கண்டு, இன்று வரை அனைவரையும் ஆனந்த கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
தாஜ்மஹாலை மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டி இருப்பதை விட, இவரது செயல் இன்று வரை மக்களின் மனதில் பெரிதும் இடம் பிடித்து வருகின்றது. பல சிரமங்களுடன் இன்று வரை முதியோர்களை பாதுகாத்து வந்தாலும், மகிழ்ச்சியுடன் சேவைகளை செய்து வருகின்றார்.
மேலும், பால், மின்சாரம், வாகனச் செலவு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு நிதி மிக மிக தேவை உள்ளது. இம்முகாமில், ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட 77 முதியோர்கள் இவர் பாதுகாப்பில் வசித்து வருகின்றனர். மேலும், ஏழு நபர்கள் முகாமில் பணி செய்து வருகின்றனர். இவரது சேவைகளை பாராட்டி சென்னை கலைவாணர் அரங்கில், 'தன்னிகரற்ற தமிழன் விருது' தனியார் நிறுவனத்தினரால் வழங்கப்பட்டது.
55 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், நோய் வாய்ப்பட்டு இருப்பவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள் உள்ளிட்ட எந்த நிலையில் இருந்தாலும் ஆதரவளித்து மனிதாபிமானத்துடன் இலவசமாக சேவை செய்து பராமரித்து வருகின்றார் பிரபாகரன்.
இது குறித்து பிரபாகரன் கூறியதாவது:-
எழுபதுக்கும் மேற்பட்ட முதியவர்களைத் தாங்கும் எங்களது இல்லத்தின் அன்றாட செலவினங்களைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். தானங்களில் சிறந்தது அன்னதானம் ஆகும். தன் பசி அறிந்தவன் பிறன் பசி போக்குவான். வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை ஆகும். ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் ஆகும். செலவுக்கு அதிகமாக வைத்திருப்பவன் செல்வந்தன் ஆவான். தான் பெற்ற செல்வத்தைப் பத்திரப்படுத்தும் சேமிப்பகம் (கஜானா) எது தெரியுமா? பசித்தவன் வயிறு ஆகும்.
விஷ்ணுவை வழிபடுவர் வைஷ்ணவர் ஆவர். விஷ்ணுவை "நாராயணன்" என்றும் அழைப்பர். பிச்சை எடுத்ததால் அவனை "தரித்திர நாராயணன்" என்றனர். ஆகவே இங்கு 'தரித்திரன்' 'நநாராயணன்' ஆகிறான். நமது வீட்டின் தலைவாசலில் நின்று "அம்மா பசிக்கு சோறு போடுங்க" என்று கேட்பது நாராயணன் அல்லவா?
"நான் பசியாயிருந்தேன், பசியாற்றினீர்கள், தாகமாயிருந்தேன், தாகம் தீர்த்தீர்கள். ஆடையில்லாமல் இருந்தேன்; மானம் காத்தீர்கள்" என்றெல்லாம் விவிலியம் விளக்கவில்லையா? ஆகவே ஒன்றே செய்க; ஒன்றும் நன்றே செய்க! நன்றும் இன்றே செய்க; இன்றும் இன்னே செய்க.
நாளை என்பது நமனுடைய நாளாகவும் இருக்கலாம் அல்லவா ? எனவே, அனைவரும் தங்களால் முடிந்த நிதியுதவினை எங்கள் இல்லத்திற்கு செயற்குழு உறுப்பினர்களிடமோ, இல்லக் காப்பாளாரிடமோ நேரிலோ அல்லது பணம் நன்கொடையாகவோ, டி.டி மற்றும் செக் ஆகவோ வழங்கலாம் என்றும் 94438 92907 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.