மதுரை மேலூரில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வெட்டிக் கொலை.. பதட்டம்- போலீஸ் குவிப்பு...
மதுரை மேலூர் அருகே நிலத் தகராறு காரணமாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதட்டம் நிலவி வருகிறது.;
கொலை செய்யப்பட்ட சுரேஷ்.
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 45). இவர், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை எதிரா டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவியும் ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். சுரேஷ், மேலூர் அருகே உள்ள சாம்பிராணிபட்டி கிராமத்தில் தென்னந்தோப்பு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார்.
அந்த தோப்புக்கு வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை சென்று விவசாயிகளை பணிகளை மேற்கொள்வது வழக்கம். அந்த தென்னந்தோப்பு வாங்கியதில் இவருக்கும், பக்கத்து இடத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தென்னந்தோப்பிற்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது 5 பேர் வழிமறித்து தாக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் நிகழ்விடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சுரேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நிகழ்ந்த இடத்தில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, அவரை முற்றுகையிட்ட சுரேஷின் உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கொலை தொடர்பாக கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். சுரேஷ் கொலை தொடர்பாக மதுரை அண்ணாநகர் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.