கண்மாயில் ஊராட்சித் தலைவர் மண் அள்ளியது தொடர்பாக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரம் , டிராக்டர்கள், டிப்பர் லாரிகளை பயன்படுத்தி 200-க்கும் அதிகமான லோடு மண்ணை அள்ளி உள்ளார்;
சிவகங்கை மாவட்டத்தில், கண்மாயில் ஊராட்சி மன்ற தலைவர் சட்ட விரோதமாக மண் அள்ளிய வழக்கு; அரசு பதிலளிக்க மதுரை கிளை உத்தரவு:
சிவகங்கை மாவட்டத்தில், கண்மாயில் ஊராட்சி மன்ற தலைவர் சட்ட விரோதமாக மண் அள்ளிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், மகிபாலன் பட்டியை சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மகிபாலன்பட்டியின் பாஸ்கரன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர், எங்கள் ஊராட்சிக்குள்பட்ட உவச்சான் கண்மாயில், சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரம் மூலம், டிராக்டர்கள் மற்றும் டிப்பர் லாரிகளை பயன்படுத்தி 200-க்கும் அதிகமான லோடு மண்ணை அள்ளிச்சென்றுள்ளார்.இதனால், இந்த கண்மாய் பாழானதுடன், கனிம வளமும் திருடப்பட்டுள்ளது.
எங்கள் பகுதியில் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எங்கள் பகுதியில், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு இதுகுறித்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.