மதுரை மாவட்ட கோயில்களில் கந்த சஷ்டி- சூரசம்ஹாரம்

இன்று காலை 11 மணியளவில் பாவாடை தரிசனம் நடைபெற்றது மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும்.

Update: 2021-11-10 03:30 GMT

சோழவந்தான் அருகே தென்கரை மூலநாத ஆலயத்தில் நடந்த சூரசம்ஹாரம்.

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலாநாதசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 10ஆம் ஆண்டு சூரசம்ஹார விழா நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

தினசரி சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.நேற்று மாலை 4 மணி அளவில் அன்னை பராசக்தியிடம் நாகேஸ்வரன் பக்தர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 5 மணி அளவில் கோவில் வளாகத்தில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகா, வீரவேல்முருகா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். மதுரை ஆதித்யா புட்ஸ் நிறுவனம் நிறுவனர் செந்தில் குமார் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.

இன்று காலை 11 மணியளவில் பாவாடை தரிசனம் நடைபெற்றது மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் மற்றும்(கல்யாண விருந்து) அன்னதானம் வழங்கப்படுகிறது.விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் முககவசம் அணிந்து,சமூகஇடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பிரதோசம் கமிட்டி செய்திருந்தனர். கோவில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் தக்கார் வெண்மணி மற்றும் கோவில் பணியாளர்கள் பிரதோசம் கமிட்டியினர் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.காடுபட்டி போலீஸார் பாதுகாப்பு செய்திருந்தனர்..

மேலூர் அருகே முருகப்பெருமானின் ஆறாவதுபடை வீடாக போற்றக்கூடிய பழமுதிர்சோலையில் சூரசம்ஹார விழா, பக்தர்களை அனுமதியின்றி நடைபெற்றது: மதுரை மாவட்டம் மேலூர் அருகே, அழகர்கோவிலில் உள்ள முருகனின் ஆறாவது படைவீடு என்று அழைக்கக்கூடிய பழமுதிர்சோலை முருகன் கோவிலில் கடந்த 04-ம் தேதி கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி, சஷ்டி விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தினை தொடங்கிய நிலையில், கோரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த விழாவில், பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது,



இதனையொட்டி, பழமுதிர்சோலை முருகப்பெருமான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மேலும், விழாவின் முக்கிய நாளான இன்று சூரப்பத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதற்காக, வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் வெள்ளிவேல் கொண்டு கஜமுகாசுரன், மற்றும் சூரபத்மனை வதம் செய்தார். பழமுதிர்சோலையில் உள்ள நாவல் மரத்தடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது, கூடியிருந்தவர்கள் அரோகரா, சண்முக, வெற்றிவடிவேலா, என எழுப்பிய கோஷங்கள் அழகர்கோயில் மலையில் எதிரொலித்தது.

இதனைத் தொடர்ந்து, வெற்றி முகத்துடன் கோவில் திரும்பிய முருகப் பெருமானுக்கு மலர்தூவியும், சூரனை வதம் செய்த வெள்ளிவேலுக்கு பாலாபிஷேகம் செய்து தீபாதரனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வனைக்கு 11 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து, நாளை திருக்கல்யாண மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது. விழா ஏற்பாடுகளை,  திருக்கோயில் உதவி ஆணையாளர் மற்றும் செயல் அலுவலர் தி. அனிதா தலைமையில் செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News