மதுரை அருகே அணுகுசாலை அமைக்க அமைச்சர் ஆய்வு

மதுரை மாவட்டம், மந்திகுளம் பகுதியில் அணுகு சாலை அமைப்பது தொடர்பாக பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு செய்தார்.;

Update: 2023-10-01 11:00 GMT

அமைச்சர்  மூர்த்தி பைல் படம்

மதுரை மாவட்டம், மந்திகுளம் கிராம பகுதியில் அணுகு சாலை அமைப்பது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், மேற்கு ஊராட்சி ஒன்றியம், மந்திகுளம் கிராம பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மதுரை-வாடிப்பட்டி நான்கு வழிச்சாலை பணிகளில் கிராம மக்கள் நலனுக்காக அணுகு சாலை அமைப்பது தொடர்பாக  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி   (01.10.2023) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி  தெரிவித்ததாவது: தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலம் மதுரை-வாடிப்பட்டி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில்,  மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மந்திகுளம் கிராம பகுதியில் உள்ள பொதுமக்கள், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளால் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று வருவதற்கும், கால்நடைகளை கொண்டு செல்வதற்கும் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்து தங்களது கிராம பகுதியில் அணுகு சாலை அமைத்திட வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இது தொடர்பாக, எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இக்கிராமப் பகுதிகளில் இன்றைய தினம் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் சிரமப்படாத வகையிலும், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் பாதிக்கப்படாத வகையிலும் அணுகு சாலை அமைத்திட வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அணுகு சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,  உட்பட தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News