முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 15 பேருக்கு சிறை : மதுரை சிபிஐ நீதிமன்றம் அதிரடி
வீட்டுக்கடன் வழங்குவதில் முறைகேடு செய்த வங்கியின் முன்னாள் மேலாளருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மதுரை :
வேலியே பயிரை மேய்ந்த கதையாக சில நேரங்களில் பொறுப்பில் இருப்பவர்களே தவறு செய்வது நடக்கும். அதைப்போலத்தான் இந்த வங்கி மேலாளர் கதையும். பொறுப்பான பதவியில் இருந்த இந்த வங்கி மேலாளர் வீட்டுக் கடன் வழங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான தண்டனையை இன்று அனுபவிக்கிறார்.
இந்த வழக்கின்படி அவர் தகுதில்லாதவர்களுக்கும் வீட்டுக்கடனை வழங்கி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த செய்தியின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தகுதியில்லாத பலருக்கு வீடு கட்ட கடன் வழங்கி ரூ. 1.55 கோடி மோசடி செய்த வழக்கில் அந்த வங்கியின் முன்னாள் மேலாளர் உட்பட 15 பேருக்கு மதுரை சிபிஐ நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.
முன்னாள் வங்கி மேலாளர் என். குணசீலனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டைனை மற்றும் ரூ.75 ஆயிரம் அபராதமும், தனி நபர்களான பால்ஜான்சன், குமரேசன் ஆகியோர்களுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை மற்றும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மகாலிங்கம், ஆறுமுகன், ராஜா தாமஸ், முரளி, திருப்பதி, தங்கராஜ், வடமலை, ஜேசுராஜ், சாரூன்ரஷீத், தேரடி முத்து, சுந்தரேஷன் ஆகியோர்களுக்கு தலா மூன்று மாதம் சிறை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.