மழை காலங்களில் மேய்சலுக்கு கால்நடைகளை வெளியே கொண்டு செல்ல வேண்டாம்: ஆட்சியர்
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், தற்பொழுது நோய் தடுப்பு நடவடிக்கையாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடப்படுகிறது
கனமழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து கால்நடைகளை வெளியில் கொண்டு செல்லாமல் வீட்டிலேயே பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வெளியிட்ட தகவல்: வடகிழக்கு பருவமழையினால், கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக வெளியே அழைத்து செல்வதை தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.
கால்நடைகள் மின்சாரம் பாய்ந்து இறப்பதை தவிர்க்க மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் ஆகியவற்றிற்க்கு அருகில் கால்நடைகளை அழைத்து செல்வதையோ, கட்டுவதையோ தவிர்க்க வேண்டும். பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ, அருகிலோ கால்நடைகள் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளுக்கு அருகிலோ, ஆற்றங்கரை ஓரத்திலோ அல்லது தாழ்வான நீர்பிடிப்பு பகுதிகளிலோ கட்டி வைக்க வேண்டாம்.
மேலும், கால்நடைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், தற்பொழுது நோய் தடுப்பு நடவடிக்கையாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடப்படுகிறது. அதனை முறையாக பயன்படுத்தி விடுபடாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், கால்நடை கொட்டகைகளை சுத்தமாக கிருமிநாசினி தெளித்து பராமரிக்குமாறும் மற்றும் கால்நடைகளை அவசர சிகிச்சைக்கு நடமாடும் அவசர சிகிச்சை ஊர்தி (கால்நடை ஆம்புலன்ஸ்) இலவச எண்.1962 அழைத்து உதவி பெறவும் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் அறிவுறுத்தியுள்ளார்.