மதுரை அருகே உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆட்சியர் சங்கீதா
மதுரை அருகே உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆட்சியர் சங்கீதா பங்கேற்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.;
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் ஒரு நாள் வருவாய் வட்டம் அளவில் தங்கி பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மக்களை நாடி. மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து. அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் முதற்கட்டமாக 31.01.2024-அன்று "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் ஒரு நாள் வருவாய் வட்டம் அளவில் தங்கி பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் இரண்டாம் கட்டமாக இன்றைய தினம் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு அரசுத் திட்டப் பணிகள் குறித்து நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்து, சிகிச்சை பெறுபவர்களிடம் மருத்துவ சிகிச்சை உரிய முறையில் கிடைக்கப்பெறுகிறதா என்பது குறித்தும், மருத்துவர்களின் வருகை குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள வருகைபுரிந்த பொதுமக்களிடம் முதலமைச்சரின் ”மக்களைத் தேடி மருத்துவ” திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் உரிய முறையில் மருத்துவப் பணியாளர்களால் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், கருங்காலக்குடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து, ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதன்பின்னர், மேலூர் வட்டம், திருவாதவூரில் அமைந்துள்ள வேளாண்மைத்துறை ஒருங்கிணைந்த வேளாண் மையத்தை ஆய்வு செய்து, அங்கு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, மேலூர் வட்டம், பூஞ்சுத்தி கிராமத்தில் அரசு தோட்டக்கலை பண்ணையினை ஆய்வு செய்து, பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை ஆய்வு செய்தார். பண்ணையில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் மரக்கன்றுகளின் வகைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மேலூர் வட்டம் , வேப்படப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறா என்பதனை, மாவட்ட ஆட்சித்தலைவர் , சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். தினந்தோறும் தயார் செய்யப்படும் உணவுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியலினை பதிவேடுகளில் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா,என்பது குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், உணவு தயார் செய்யப்படும் உணவு கூடத்தினை ஆய்வு செய்து, உணவு கூடத்தினை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று சத்துணவுப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மேலூர் வட்டம், கருங்காலக்குடி ஊராட்சியில் உள்ள நூலகத்தை ஆய்வு செய்து நூலகத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன என்றும்,நூல்களின் வகைபாடு குறித்தும் கேட்டறிந்தார். நூலகத்திற்கு படிப்பதற்காக தினந்தோறும் எத்தனை நபர்கள் வந்து செல்கின்றனர் என்பது குறித்தும், நூலகத்திற்கு வருகை புரிபவர்களுக்கு தனியாக பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், நூலகத்தில் எத்தனை நபர்கள் உறுப்பினர்களான சேர்ந்துள்ளனர் என்பது குறித்தும் கேட்டறிந்தார். இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு நூலகத்தின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நூலகத்திற்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நூலக அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, தலைமையில் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்பு, மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மேலூர் வட்டத்தில், இன்றிரவு தங்கி நாளை காலையிலும் கள ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிகழ்வுகளின் போது, மேலூர் வட்டாட்சியர் முத்துப்பாண்டி , வேளாண்மைத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட அனைத்துறை அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.