தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற விவசாயி மகனை பாராட்டிய முதல்வர்
உலக சாம்பியன்ஷிப் கலி கொலம்பியா-2022 போட்டியில் வெள்ளிப் பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்றார்;
மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் டி.செல்வபிரபு, ஆசியாவின் சிறந்த ஜுனியர் வீரருக்கான விருது பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தடகள விளையாட்டு வீரர் டிரிப்பிள் ஜம்ப் தடகள போட்டியில் 20-வது தேசிய ஜுனியர் ஃபெடரேஷன் கோப்பை 2022 போட்டியில் தங்கப் பதக்கம் 4-வது கேலோ இந்தியா இளைஞர் போட்டியில் தங்கப் பதக்கம், இருபது வயதிற்குட்பட் டோருக்கான, உலக சாம்பியன்ஷிப் கலி கொலம்பியா-2022 போட்டியில் வெள்ளிப் பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்றார்.
தடகள விளையாட்டு வீரர் டி.செல்வபிரபு, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடிமங்கலம் கிராமத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இவருக்கு இளமையிலிருந்தே விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உண்டு. தனது விளையாட்டுத் திறமையை சரியான முறையில் செயல்படுத்தியதன் வெற்றிதான் இன்று ஆசியாவின் சிறந்த ஜுனியர் வீரருக்கான விருதினை பெற்றுள்ளார். தடகள விளையாட்டு வீரர் டி.செல்வபிரபுவுக்கு , தமிழ்நாடு முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர்.அதுல்யா மிஸ்ரா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்,செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் தடகள விளையாட்டு வீரரின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.