மேலூர் அருகே பாரதியார் பிறந்த தினம்
மேலூர் அருகே அரிட்டாபட்டியில் பாரதியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.;
தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய வாழ்விடமாக அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி கிராமம், பல்வேறு வரலாற்று சான்றுகளையும், தொல்லியல் அடையாளங்களையும் கொண்டு திகழ்கிறது.
மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டுள்ள இந்த கிராமத்தின் உயிர்க்கோளமான கழுகுமலை மலைக்கும் தேன்மலைக்கும் நடுவில் உள்ள கணவாய் மலைப்பகுதியில் மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு, இராமனழகு அறக்கட்டளையின் நம்மைச் சுற்றி இலட்சம் மரங்கள் சார்பாக நம் மண்ணுக்கேற்ற நாட்டு மரங்களான புளி, நாவல்,அத்தி, மருதம், கடம்பம் போன்ற மரக்கன்றுகள் இந்த கிராமத்தின் பல்லுயிர் தன்மையினை பாதுகாத்திட அரும்பாடுபட்டு வரும் சகோதரர் ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நடவுசெய்யப்பட்டது.
இந்த நல்லதொரு நிகழ்வில் சமூக ஆர்வலர் மக்கள் தொண்டன் அசோக்குமார், அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் பெரியதுரை, சகோதரி மாரீசுவரி, குழந்தைகள் பா.இராகவி, செ.முத்துமீனா, அ.சுதர்சன், அ.சஸ்மிதா மற்றும் தாமோதரன்,செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
இராமனழகு அறக்கட்டளையின் நிறுவனர் முரா.பாரதிதாசன் அவர்களின் குழந்தைகள் யோகேசன் மற்றும் இராகவியின் தினசரி சேமிப்பு பணத்தில் இருந்து 16 மரக்கன்றுகள் வாங்கி கொடுத்தனர்.
அறக்கட்டளையின் நிறுவனர் முரா.பாரதிதாசன் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.