யா. ஒத்தக்கடையில், ஆலய விழா: சிறப்பு அலங்காரத்தில் அம்மன்!

யானைமலை ஒத்தக்கடையில், ஆலய விழா: சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் தந்தார்.

Update: 2024-04-11 11:33 GMT

யா.ஒத்தக்கடையில் ஸ்ரீகாளியம்மன், மலைச்சாமி கோவில், ஸ்ரீசுந்தர மாரியம்மன் பங்குனி மாத முளைப்பாரி உற்சவ திருவிழா 

மதுரை:

மதுரை மாவட்டம், யானைமலை ஒத்தக்கடையில், இராஜகம்பீரம் மற்றும் யா.ஒத்தக்கடை ஸ்ரீகாளியம்மன் கோவில் 44 ம் ஆண்டு விழா, மலைச்சாமி கோவில் 43 வது ஆண்டு விழா மற்றும் சுதந்திர நகர் ஸ்ரீசுந்தர மாரியம்மன் 59 ம் ஆண்டு விழாவின் பங்குனி மாத முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது.

அம்மன் கோயிலில் பங்குனி மாதம் செவ்வாய் சாட்டுதல் விழா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்தாண்டும் செவ்வாய் சாட்டும் விழாவையொட்டி யா.ஒத்தக்கடை மற்றும் இராஜ கம்பீரம் மக்கள் ஒரு வாரத்துக்கு முன்பு காப்புக்கட்டி விரதம் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, செவ்வாயன்று முதல் நாளில் காப்புக் கட்டி தானான்னே பாடி கும்மி கொட்டினர்.

இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனைகள் நடைபெற்றன. மறுநாள் மஞ்சள் தண்ணீர் ஊற்றினர். கூல் ஊற்றுதல் மற்றும் விளக்கு பூஜை நடந்தது. முளைப்பாரிக்கு தினமும் தானான்னே கும்மி கொட்டி பாடி வந்தனர். ஏழாவது நாள் (ஏப்.9 ம்) தேதியன்று தீச்சட்டி எடுத்து முளைப்பாரியுடன் ஊர்வலம் வந்தனர். இதில், வான வேடிக்கையுடன் மேள தாளம் கரகம் ஜோடித்து மாவிளக்கு எடுத்து நரசிங்கம் பொய்கையில் இருந்து, பெரியவர்கள் 300, சிறியவர்கள் 50 என 350 முளைப்பாரிகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனை வழிபாடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அம்மன் முளைப்பாரி அணிவகுப்பானது யானைமலை ஒத்தக்கடை சுதந்திர நகர் முதல் தெருவிலிருந்து கொட்டாச்சிக்கரை வரையிலும், திருமோகூர் சாலை வரையிலும் பின்னர் ஐ-கோர்ட் முன்பு வரை சென்றடைத்து நிறைவடைந்தது.

முளைப்பாரி ஊர்வலத்தை முன்னிட்டு, ஆங்காங்கே யா.ஒத்தக்கடை போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் வெகுசிறப்பாக ஈடுபட்டனர்.

நிகழ்வில், யா.ஒத்தக்கடை, இராஜ கம்பீரம் மற்றும் சுதந்திர நகர் பொதுமக்கள் கோவில் நிர்வாகத்தினர் ஆங்காங்கே மின் விளக்குகள் மற்றும் அன்னதானத்தை வெகு சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆடல் பாடலுடன் அம்மன் முளைப்பாரியுடன் ஊர்வலம் வந்தனர்.

விழாவில், யா.ஒத்தக்கடை, இராஜ கம்பீரம் மற்றும் சுதந்திர நகர் பொதுமக்கள் கோவில் நிர்வாகத்தினர் ஆன்றோர்கள் சான்றோர்கள் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலும், எட்டாவது நாளான ஏப்.10 ம் தேதியன்று அம்மனுக்கு பொங்கல் வைத்தும் முளைப்பாரி வளர்த்து அதனை முக்கிய வீதிகளின் வழியே கொண்டு வந்து நரசிங்கம் அருகே உள்ள அலங்கார குளத்தில் கரைத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து 9 வது நாளான வியாழனன்று, தெருக்களில் உறவினர்களுக்கிடையே மாமன், மச்சான் முறை கொண்ட ஆண்கள் மீது பெண்களும், முறை பெண்கள் மீது ஆண்களும் மாற்றி, மாற்றி மஞ்சள் தண்ணீர் உற்சாகமாக ஊற்றி கொண்டாடினர்.

Tags:    

Similar News