அழகர் மலை ராக்காயி அம்மன் கோவிலுக்கு விரைவில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு
பழமையான ராக்காயி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.;
ராக்கயி அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு.
மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள அழகர்கோவில் ஸ்ரீ கள்ளழகர் திருக்கோவில், பழமுதிர்சோலை முருகன் திருக்கோவில், மலை மீது உள்ள ராக்கயி அம்மன் திருக்கோயில்களில், ரூ.17 கோடியே 62 இலட்சம் மதிப்பீட்டில் மலைப்பாதை மேம்பாடு, பக்தர்களின் வசதிகளுக்காக கோவிலில் உட்கட்ட வசதிகள், மண்டபம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, பழமையான இந்த அழகர்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக 17கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. மேலும் இங்கு உள்ள பழமையான ராக்காயி அம்மன் கோவிலில் எப்பொழுது கும்பாபிஷேகம் நடைபெற்றது என குறிப்புகள் இல்லாததால் இக்கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் தமிழகத்தில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி முடித்த அனைவருக்கும் மீண்டும் பயிற்சி கொடுத்து ஆகமவிதிகளுக்கு உட்பட்டு பணிகள் வழங்கப்படும். மேலும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை வருவாய்துறை அதிகாரிகளுடன் இணைந்து கணக்கெடுத்து அவற்றை இப்போது உள்ள காலத்திற்கு ஏற்ப இந்து அறநிலையத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட திருக்கோயில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
அதேபோல் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.