மாநாட்டை விட்டுவிட்டு சாப்பாட்டை பிரச்னை ஆக்குவதற்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்
மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், புளியோதரை மீதமானதை மிகைப்படுத்தி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி:
மதுரை.
எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டத்தை வழங்கியதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் வகையில் கழக அம்மா பேரவையின் சார்பில் காந்தி மியூசியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். எஸ். சரவணன், கே தமிழரசன், கருப்பையா ,மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல், மாநில நிர்வாகிகள் ஏகேபி சிவசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் திருப்பதி மற்றும் நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
புரட்சித்தலைவர் சத்துணவு திட்டம் தந்தார் சரித்திரம் படைத்தார். புரட்சித்தலைவி அம்மா, அம்மா உணவகம் உட்பட பல்வேறு திட்டங்களைத் தந்தார். அதே வரிசையில், பல்வேறு குடிமராமத்து திட்டங்கள் ,50 ஆண்டு காவிரி பிரச்னைக்கு தீர்வு, 7.5 இட ஒதுக்கீடு இது போன்ற திட்டங்களை தந்ததால் எடப்பாடியாருக்கு , புரட்சி தமிழர் என்று மதுரையில் பட்டம் சூட்டப்பட்டுள்ளது. இதனால், தமிழ்க்காம பெருமை அடைந்துள்ளது.
30 கிலோ மீட்டர் தொலைவிற்கு தொண்டர்கள் காத்திருந்து மாநாட்டுக்கு வந்தனர். அதிமுக மாநாடு மதுரை மண்ணுக்கு பெருமையாக அமைந்துள்ளது. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வரிசையில் புரட்சித்தமிழராக எடப்பாடி கே.பழனிசாமி திகழ்கிறார்.
மாநாட்டில் அதிமுக கொடியேற்றிய எடப்பாடி பழனிச்சாமி விரைவில் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவார். 8 கோடி தமிழர்களும் உணர்வாலும், உடலாலும் மாநாட்டில் பங்கேற்று உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களை காப்பார் என 8 கோடி மக்களும் நினைக்கிறார்கள்.
கண் இருந்தும் குருடர்கள் போல சில நய வஞ்சகர்கள் எடப்பாடி பழனிசாமி என்ன புரட்சி செய்தார்? என கேள்வி கேட்கிறார்கள் அவர் செய்த வரலாற்றை படித்துப் பார்த்தால் அவர்களுக்கு தெரியும். மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.
மதுரை மாவட்ட காவல்துறை காழ்ப்புணர்வுடன் செயல்பட்டது. மாநாட்டிற்கு வந்த வாகனங்களை 30 கி.மீ தொலைவுக்கு முன்பாகவே திசை திருப்பியதால் தொண்டர்கள் வருவதில் பல தடைகள் ஏற்பட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், காவல்துறை மாநாட்டுக்கு வந்த அதிமுக தொண்டர்களை திருப்பி அனுப்பி உள்ளது. தடைகளைத் தாண்டி மாநாட்டுக்கு அதிமுக தொண்டர்கள் வந்துள்ளனர்.
சாமானிய வீட்டு பிள்ளைகளும் மருத்துவராக வேண்டும் என, எடப்பாடி பழனிசாமி 7.5 சதவீத இட ஒதுக்கீடு தந்தார். மாநாடு முடிந்த பின்னர், சமையல் பாத்திரங்களை எடுத்து செல்வதற்காக மீதமிருந்த உணவுகள் கொட்டப்பட்டு அது சிதறி கிடந்ததை மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
50 லட்சம் பேர் வர திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறை குளறுபடியால் 35 லட்சம் தொண்டர்கள் வர முடியாததால் உணவு மீதமானது. மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், புளியோதரை மீதமானதை மிகைப்படுத்தி பேசிக் கொண்டிருக்கின்றனர். தொண்டர்கள் அதிக அளவு வருவார்கள் என ,அவசர கதியில் அதிகமாக உணவு சமைக்கப்பட்டதன் காரணமாகவே உணவு மிஞ்சியது. உணவு மிஞ்சியது குறித்து விசாரணை நடத்தியும் வருகிறோம்.
நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். ஆட்சிக்கு வந்தால் நீட் ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என, சொன்ன உதயநிதி இப்போது ராகுல் ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்கிறார். உதயநிதி இரட்டை வேடம் போடுகிறார்.
ஆனால், இனிமேல் டி.டி.வி.தினகரன் பேச்சு எடுபடாது ஜெயிலர் படத்தை விட அதிமுக மாநாடு பேசப்பட்டது. அதிமுகவை போராட திமுக ஏன் அழைக்கிறது? உண்ணாவிரதத்தில் உதயநிதி பேசியதை பார்த்து மக்கள் சிரித்து வருகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.