இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை : அமைச்சர் மூர்த்தி தகவல்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்
உலக மண்வள தினத்தை முன்னிட்டு வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்( 2021- 22) (உலக மண்வள தினம், ஒருங்கிணைந்த பண்ணையம், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கம்) சார்பில் வேளாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.
விழாவில், அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதோடு, விவசாய பெருங்குடி மக்களின் பொருளாதாரம் உயர வேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு தமிழகத்தில் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை உருவாக்கினார்.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின்னர் விவசாயிகளுக்கு பயன்படுகின்ற வகையில் பெரியாறு அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு தேவைக்கு அதிகமாக வேளாண் உற்பத்தி உள்ளது. முன்பு உற்பத்தி செய்யப்பட்ட நெல்லில் இருந்த ஊட்டச்சத்துக்கள் தற்பொழுது உற்பத்தி செய்யப்படும் நெல்லில் இல்லை. வேளாண் பெருமக்கள் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த இதுதான் உகந்த காலமாக இருக்கும். கிராமப்புறங்களில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இயற்கை விவசாயத்திற்கு அரசு வழங்கும் பட்டியல் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவது குறித்து , தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
மதுரை மாவட்டத்தை தலைநகராக வைத்து 6 மாவட்டங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளால் முருங்கை மூலமாக உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படும். இனிவரும் காலங்களில் தோட்டக்கலைத்துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அனைத்து பகுதிகளிலும் முருங்கையை விவசாயிகள் பயிரிட்டு பயனடைய வேண்டும். ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வகையில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. நாடடின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகள் அனைவரும பயன்பெறும் வகையில், லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொள்கள் ரூ.1,35,000/- மதிப்பிலும், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பழமரக்கன்றுகள் 2 பயனாளிகளுக்கு ரூ.90,000/- மதிப்பிலும், தேனீப்பெட்டி 1 பயனாளிக்கு ரூ.45,000/- மதிப்பிலும், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000/- மதிப்பிலும், நுண்ணீர் பாசனம் திட்டத்தின் கீழ் மழைத்தூவான் 1 பயனாளிக்கு ரூ.36,176/- மதிப்பிலும், வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் சார்பில், தென்னை மரம் ஏறும் கருவி 1 பயனாளிக்கு ரூ.4,000/- மதிப்பிலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் நெல் உருளை விதைப்பு கருவி 1 பயனாளிக்கு ரூ.4,000/- மதிப்பிலும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தார்பாலின் 1 பயனாளிக்கு ரூ.2,100/- மதிப்பிலும், நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தின் சார்பில் மின் கல கைத்தெளிப்பான் 1 பயனாளிக்கு ரூ.2,000/- மதிப்பிலும், தேசிய மண் வள இயக்கத்தின் சார்பில் மண் வள அட்டை 4 பயனாளிகளுக்கும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் வீரிய ஒட்டு கத்தரி நாற்றுகள் 1 பயனாளிக்கு ரூ.10,000/- மதிப்பிலும், சிப்பம் கட்டும் அறை 1 பயனாளிக்கு ரூ.2,00,000/- மதிப்பிலும் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.5,40,276/- மதிப்பீட்டில் திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
இதில் ,மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) . வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர்.வி.கு.பால்பாண்டி , வேளாண் இணை இயக்குநர் .விவேகானந்தன், வேளாண்மை உதவி இயக்குநர் .வளர்மமதி , மாவடட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள்க பலர் கலந்துகொண்டனர்.