வெண்பட்டு உடுத்தி செயற்கை வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்!

கொரோனா பரவல் காரணமாக, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கையான வைகை ஆற்றில், வெண்பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார்.

Update: 2021-04-27 06:48 GMT

உலகப்புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவில், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு பெரிதும் கொண்டாடப்படுகின்ற ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறும் இந்த விழாவில் மதுரை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பது வழக்கம்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த ஆண்டு சித்திரை திருவிழா கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது. அதே போன்று இந்த ஆண்டும் கொரோனா 2ம் அலை காரணமாக,  கோவில் வளாகத்திலேயே நடைபெற்றுள்ளது.

அவ்வகையில்,  மதுரை மாவட்டம் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் மாதிரி வைகையாறு வடிவமைக்கப்பட்டு அதில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, இன்று காலை கள்ளழகர் வெண்பட்டு உடுத்தி மாதிரியாக வடிவமைக்கப்பட்ட வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

இந்நிகழ்ச்சியில், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில், இந்த நிகழ்வு யூடியூப் வாயிலாக இணையதளத்தில்  வீட்டில் இருந்தே கண்டுகளிக்க நேரலை செய்யப்பட்டது.

Tags:    

Similar News