மதுரையில் பலத்த மழை: கால்வாய் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி
மதுரை- உத்தங்குடி சாலையில் வளர்நகரில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
மதுரையில் பலத்த மழை கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட நேரிட்டது.
மதுரை மாவட்டத்தில், பல பகுதிகளில் நேற்ரு அதிகாலை முதலே மழை பெய்தது. மதுரை நகரில், கோரிப்பாளயம், சிம்மக்கல், பழங்காநத்தம், திருநகர், ஒத்தக்கடை, மேலூர், சமயநல்லூர், சோழவந்தான், கருப்பாயூரணி, வரிச்சூர், வண்டியூர், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில், மழையானது விட்டு, விட்டு பெய்தது.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மதுரையில் சில இடங்களில் கால்வாய் நீர் பெருக்கெடுத்து சாலையில் வெள்ளம் போல ஓடியது. மதுரை- உத்தங்குடி சாலையில், வளர்நகரில், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, நீரானது சாலையில் பெருக்கெடுத்து ஒடுவதால், நான்கு வழிச்சாலையில், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். பலத்த மழையையொட்டி, மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.