சரக்கு ரயில் வேகம், நேர துல்லியம்: மதுரை ரயில்வே கோட்டம் முதலிடம்

சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை கோட்டம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

Update: 2024-09-23 04:34 GMT

இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை ரயில்வே கோட்டம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் சரக்கு ரயில்களை மணிக்கு 38.62 கி.மீ., வேகத்தில் இயக்கி இந்திய அளவில் முதன்மை கோட்டமாக இருந்து வந்தது.

இந்த நிதியாண்டிலும் கடந்த செப்டம்பர் 15 வரை சரக்கு ரயில்களின் வேகம் மணிக்கு 40.45 கி.மீ. ஆக உயர்ந்து தொடர்ந்து இந்திய அளவில் முதன்மை கோட்டமாக சாதனை புரிந்து வருகிறது. சரக்கு ரயில்களின் சராசரி வேகத்தில் பயணிகள் ரயில்களுக்கு வழி விடுவதற்காக நிறுத்தி வைக்கும் காலம், சரக்கு ரயில் கட்டமைக்கும் நேரம் போன்றவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அதேபோல பயணிகள் ரயில்களையும் இந்த நிதியாண்டில் 168 நாட்களில் 108 நாட்கள் 100% காலம் தவறாமல் இயக்கி சாதனைப் புரிந்துள்ளது. இந்த சாதனையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நடந்த கோட்ட ரயில்வே மேலாளரின் வார பாதுகாப்பு கூட்டத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என். ராவ், வேக சக்தி முதன்மை திட்ட மேலாளர் கே. ஹரிகுமார், முதுநிலை கோட்ட ரயில் போக்குவரத்து மேலாளர் வி. பிரசன்னா, முதன்மை கோட்ட பொறியாளர் எம். கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News