சிவகாசி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் கிடைக்க ஏற்பாடு-அமைச்சர் தங்கம் தென்னரசு
சிவகாசிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயராக சங்கீதா இன்பம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேயராக பதவியேற்ற சங்கீதா இன்பம் நிருபர்களிடம் பேசுகையில், சிவகாசி மாநகராட்சியில் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் முதல் வேலையாக செய்யப்படும். தொழில் நகரான சிவகாசியில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மாநகராட்சி முழுவதும் தூய்மையாக இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்ட சங்கீதா இன்பத்திற்கு, அமைச்சர் தங்கம்தென்னரசு நேரில் வந்து வாழ்த்துகள் தெரிவித்தார். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சிவகாசி தமிழ்நாட்டின் மிகப்பெரும் தொழில் நகரமாக இருந்து வருகிறது. மேலும் தொழில்கள் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, வேலை வாய்ப்புகள் பெருகுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். அடிப்படையான வசதிகள் அனைத்தும் சிவகாசி மாநகராட்சியில் ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.