வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
வெப்ப அலையில் இருந்து நம்மையும், நம் வாரிசுகளையும் பாதுகாக்க தமிழகத்தை வனமாக மாற்றுவோம்.;
தமிழகத்தில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்கள், பசுமை விரும்பிகள், மரங்கள் மீது, மண்ணின் மீது எதிர்காலத்தில் வரும் பருவநிலை மாற்றத்தால் வெயில், வெப்பம் அதிகரிப்பதை தடுக்க நினைப்பவர்கள், இப்போ பலரும் உணர்வது, அனுபவிப்பது, தெரியும். நாம் கட்டிய வீட்ல கூட குடியிருக்க இயலவில்லை. வெயில் சுடுவதால், இரவில் தூங்க முடிவதில்லை. ஒருநாளைக்கு மூன்று நான்கு முறை குளிப்பது, இரவில் வெக்கை என அனுபவித்து வருகிறோம்.
ஆகவே அதிகமாக மரங்களை நடுவோம், வெப்பத்தை குறைப்போம். ஒவ்வொரு ஊரிலும் பஞ்சாயத்தில் உள்ளவர்கள் ஊருக்கு பத்தாயிரம் மரங்களை நட்டு வளர்த்தால் போதும், இதை கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி என நினைக்காம மரங்களின் அவசியத்தை உணர்வோம். இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும். அப்போ நம்மால் தாங்க இயலாது. குழந்தைகள் நிலையை நினைத்துப்பாருங்கள்.
இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்புளம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது. நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பின் முடிந்த அளவிற்கு மரங்களை நடுங்கள். மரம் நடுவோம் இயற்கையை காப்போம்.
வரும் ஆவணி மாதம் மழைக் காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 100 கோடி மரக் கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம். மரக் கன்றுகள் உற்பத்தியாளர்கள், வனத் துறை, பள்ளி தாளாளர்கள், உயர் பதவிகளில் இருப்போர், பிரபலங்கள், ஆன்மீக தலைவர்கள், அனைத்து மதங்களின் குருமார்கள், கிராம தலைவர்கள், ஊர் தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.
அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகிக் கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள். 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மர கன்றிற்கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.
இதே போல் சில வருடங்கள் செய்தால், 2030ம் ஆண்டுக்குள் 100 கோடிக்கும் அதிகமான மரங்கள் வளர்ந்து தமிழகமும் குளிர்ந்து போகும். அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மர கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள். இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள்.
மர கன்றுகள் நடுங்கள் அல்லது மர கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது மர கன்றுகள் நட உதவுங்கள். மர கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகில் உள்ள நாற்று பண்ணைகளில், நர்சரிகளில் இப்போதே முன் பதிவு செய்யுங்கள். பொது இடங்களில் புங்கன் மரம், அரச மரம், குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம் மற்றும் பலன் தரும் மரங்களை இவைகளை வளர்ந்த கன்றுகளாக பார்த்து வாங்கி நடுவது நன்று.
இதில் புங்கன் மரத்தை ஆடு மாடுகள் கடிக்காது. நீர் வழி தடங்கள் அருகில் பூவரசு மரம், பனை மரம், பாதுகாப்பு உள்ள வீட்டு அருகில் உள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம்.
கறிவேப்பிலை, லட்ச கொட்டை கீரை, தேக்கு, நாட்டு மா மரம், நாட்டு பலா, நாட்டு அத்தி, குமிழ், மகா கனி, மலை வேம்பு போன்ற மரங்கள் நடலாம். வழிபாட்டு தலங்களில் மர மல்லி, மகிழம் மரம், மனோரஞ்சிதம், பாரிஜாதம், புன்னை மரம், செண்பக மரம், மருதாணி போன்றவற்றை நடலாம். 2030 இல் பச்சை பசேல் என்ற தமிழகம் உருவாக்குவோம். இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம். மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். விழிப்புணர்வு செய்யுங்கள்.
மர கன்றுகள் நடுவதற்கு ஆவணி மாதத்தில் முதல் மழை பெய்ததும் 1 நாள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுகிறோம். ஒட்டுமொத்த தமிழகத்தையும் வனமாக மாற்றுவது ஒன்றே வெப்ப அலையில் நாம் தப்ப ஒரே வழி. வெப்ப அலைகளுக்கேதிரான ஒரு போர் போல் தான் இதுவும். ஒன்றுபட்டு வென்று காட்டுவோம். ஒன்றே செய்வோம். அதனை இன்றே துவங்குவோம்.