புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்காக பூமிபூஜை செய்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஒரு சிலர் ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2023-10-31 15:34 GMT

ஓசூர் ஒன்றியம் அச்செட்டிப்பள்ளி ஊராட்சிக்குட்பட்டது எடப்பள்ளி கிராமம், இந்த கிராமத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கிராம சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து எடப்பள்ளி கிராம மக்கள் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு இடத்தில் நேற்று, ஊராட்சி தலைவர் தலைமையில் ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்காக பூமிபூஜை செய்தனர்.

இந்த நிலையில், அந்த இடத்தை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள ஒரு சிலர் ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மேலும் ரேஷன் கடை கட்டினால் அதனை இடித்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஓசூர் துணை ஆட்சியர் அலுவலகத்தில் வாயில் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் வட்டாட்சியர் சுப்பிரமணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக வருவாய்த்துறையினர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் துணை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News