ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜையுடன் ஓசூர் அதிமுக வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷண்ன்ரெட்டி இன்று ஓசூர் டிவிஎஸ் நகர் ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, பிரசாரத்தை தொடங்கினார்.
ஓசூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பவர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, இவர் ஓசூரை சேர்ந்த தமிழக முன்னாள் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணாரெட்டியின் மனைவி ஆவார்.
அதிமுக தலைமைகழகத்தால் ஒசூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஜோதி பாலகிருஷ்ணரெட்டிக்கு சீட் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் ஓசூர் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று அவர் ஓசூர் டிவிஎஸ் நகரில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தினார். அப்போது ஆஞ்சநேயர் சுவாமிக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது ஓசூர் தொகுதியில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறவேண்டுமென ஜோதி பாலகிருஷ்ணரெட்டியும் அவரது கணவர் பாலகிருஷ்ணரெட்டியும் வழிபாடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஓசூரில் உள்ள அதிமுக தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டிக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும், வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றிக்காக கடுமையாக உழைப்போம் என்றும் சூளுரை எடுத்து கொண்டு தீவிர பிரசாரத்தை தொடங்கினர்.