ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி வீடு முற்றுகை
ஒசூர் அருகே, ஏலச்சீட்டு நடத்தி ரூ. 25 கோடி மோசடி செய்ததாக, தம்பதியினர் வீட்டை, பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.
ஒசூர் அருகே பழைய மத்திகிரி பொதிகை நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா, இருவரும் 15 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வருகின்றனர். 500க்கும் மேற்பட்டோர், மாதந்தோறும் 2 லட்சம், 5 லட்சம், 10 லட்சம், 20 லட்சம் என பல லட்ச ரூபாய் வரை ஏலச்சீட்டுக்காக சீட்டுப்பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் பொதுமக்களுக்கு வழங்காமல் வந்ததாக கூறப்படுகிறது. கொரோனா காலம் என்பதால் பணம் வசூலாகவில்லை என பொதுமக்களிடம் இவர்கள் சாக்கு போக்கு சொல்லியுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஒரு சில பொதுமக்கள் ரவிச்சந்திரன் வீட்டிற்கு பணம் கேட்டு சென்றபோது ரவிச்சந்திரன் லதா தம்பதியினர் பொதுமக்களின் ஏலச்சீட்டு பணத்தை கையாடல் செய்து தங்களின் குடும்பத்தோடு வீட்டை காலி செய்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் என ஏராளமானோர் பொதிகை நகரில் உள்ள ரவிச்சந்திரனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மத்திகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் 25 கோடி வரை ரூபாய் மோசடி செய்ததாகக்கூறப்படும் தம்பதியினர் தலைமறைவானது, ஒசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.