ஓசூர் மாநகர் சிலிக்கான் வேலியாக மாற்றப்படும்: அமைச்சர் நம்பிக்கை
ஓசூர் மாநகரம் சிலிக்கான்வேலியாக மாற்றப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதியுடன் தெரிவித்தார்,;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சொந்தமான இ-சேவை மையம், அரசு கேபிள் டிவி மையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஓசூர் மாநகரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பூங்கா மையத்தையும் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித முன்னேற்றத்தையும் காணவில்லை.
எனவே உடனடியாக இதனை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் சென்று ஓசூரை ஒரு சிலிக்கான் வேலையாக மாற்றும் திட்டத்தை இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இங்கு மேலும் அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்துவது சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகள் தொழில் முனைவோர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக திட்ட அறிக்கையாக தயாரிக்க உத்தரவிடப்பட்டு அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று,
ஓசூரில் உள்ள எல்காட் வெகுவிரைவில் முழு அளவிலான பயன்பாட்டிற்கு நிச்சயமாக கொண்டு வரப்படும். அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தத் துறையின் வாயிலாக இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சேவைகள் ஆற்றி வருவதோடு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வருகிறது.
தமிழர்களுடைய கலை இலக்கியம் பண்பாடு வரலாறு மற்றும் வரலாற்று சின்னங்கள் ஆகியவைகளை ஆவணப்படுத்தி உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு எடுத்துச் சென்று அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல இணையவழி கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் விர்ச்சுவல் அகடமி வாயிலாக இணையவழி தமிழ் கல்வி முறை உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வருங்காலம் தகவல் தொழில்நுட்பத்தின் உலகளாவிய முக்கியத்துவம் கருதி தகவல் தொழில்நுட்பத் துறையை மேலும் மேம்படுத்தி மக்களுக்கு முழு பயன்பாட்டை அளித்து தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத் துறையை மிகச்சிறந்த துறையாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துவங்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு கடந்த பத்தாண்டு காலம் இங்கே ஒரு அமைச்சர் இருந்து பணியாற்றியதற்காக எந்த ஒரு தடயமும் இல்லாத நிலைதான் இருக்கிறது.
இதற்கு காரணம் முதலீட்டாளர்கள் தொழில் துவங்க உகந்த சூழல் இல்லாத நிலையில் வேறு மாநிலங்களுக்கு அவர்கள் சென்றுவிட்டனர். எனவே இனி வரும் காலங்களில் முதலீட்டாளர்களும் தொழில்முனைவோர்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்யும் அளவிற்கு, தொழில் செய்வதற்கான வழிமுறைகளை எளிதாக்கி நிச்சயமாக மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயச்சந்திரா பானு ரெட்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.