வெளிமாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது
ஓசூர் அருகே காரில் கடத்திய 816 மதுபாக்கெட்டுகள் போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை கால்நடை பண்ணை பகுதியில் நேற்று மத்திகிரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். போலீசாரை கண்டதும் காரை அப்படியே நிறுத்திவிட்டு அதிலிருந்து இரண்டு பேர் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் காரில் கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காரில் நடத்திய சோதனையில் 17 பெட்டிகளில் 816 மதுபான பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதனை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நூருல்லா, மாலிக் ஆகியோர் மீது போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தி தொடர்ந்து தேடி வருகின்றனர்.