ஆசிரியை கன்னத்தில் அறைந்த 11-ம் வகுப்பு மாணவன்: அதிகாரிகள் விசாரணை
ஆசிரியை கன்னத்தில் அறைந்த பள்ளி மாணவன்: அதிகாரிகள் விசாரணை, மாணவன் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மாசிநாயக்கன்பள்ளி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் பள்ளி ஆசிரியை ஒருவரை அப்பள்ளியில் படிக்கும் 11 வகுப்பு மாணவன் கன்னத்தில் இருமுறை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் அருகே உள்ள மாசிநாயகனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 5 ஆசிரியர் 15 ஆசிரியைகள் உட்பட 20க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 01 ஆம் தேதி ஆசிரியை ஒருவர் 11 ஆம் வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார்.
அப்போது ஒழுங்கீனமாக இருந்த ஒரு மாணவரை அவர் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளி மாணவர் ஆசிரியையின் கன்னத்தில் இரண்டு முறை அறைந்துள்ளார், மேலும் அவரை கீழேயும் தள்ளி விட்டுள்ளார். இதனால் அந்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் பள்ளியில் வேலை பார்த்து வரும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆசிரியையின் கன்னத்தில் அடித்த பள்ளி மாணவர் மீது இதுவரை கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகியோர் சார்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.