ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு இரண்டாவது நாளாக நீா்வரத்து அதிகரிப்பு
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு இரண்டாவது நாளாக நீா்வரத்து அதிகரிப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து வருகிறது.
கா்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒசூா் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடிநீா் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் பாதுகாப்புக் கருதி நான்கு மதகுகள் வழியாக 3040 கனஅடி நீா் வெளியேற்றப்படுவதால் வெண் நுரை அதிகளவில் வெளியேறி வருகிறது. நேற்று காலையில் குறைந்த அளவில் இருந்த நிலையில் நேற்று மாலை முதல் அதிக அளவில் வெண்நுரை வெளியேறி வருவதால் அதனை வெளியேற்றும் நடவடிக்கையில் ஒசூா் தீயணைப்பு துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
கெலவரப்பள்ளி அணையின் அருகில் உள்ள தரைப்பாலத்தின் மீது வெண்நுரை படா்ந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினா் தண்ணீரைப் பீச்சியடித்து வெண் நுரையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.