வீட்டுமனை கேட்டு திருநங்கைள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், திருநங்ககைள் வீட்டுமனை கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.;
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் வசித்து வரும் திருநங்கைகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி பாஞ்சாலியூரில் 45 திருநங்கைகள் வசித்து வருகின்றோம். அதில், ஏற்கனவே 15 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 30 பேருக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். அதே போல், ஓசூரில், காந்திநகர், கிருஷ்ணப்பா காலனி, குமரன் நகர், ராம் நகரில் 150 பேர் வசித்து வருகிறோம்.
இதில், 50 பேருக்கு சொந்த வீடு இல்லை. எங்களுக்கு சொந்த வீடும் இல்லை. எங்களுக்கு வாடகைக்கு வீடும் கொடுப்பதில்லை. இதனால் வசிப்பதற்கு வழியின்றி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால் தொடர்ந்து நாங்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே வீடு இல்லாத எங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.