ஓசூர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் என மக்கள் பீதி
ஓசூர் தனியார் லே அவுட் குடியிருப்புக்கு அருகே சிறுத்தை காலடி தடம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வனத்துறையினர் நேரில் ஆய்வு;
ஓசூர் ரிங்ரோட்டில் உள்ள கொத்தூர் பிரிவு ரோட்டிற்கு அருகே, தனியார் லே அவுட் உள்ளது. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காட்டு பகுதி அருகே, சிறுத்தையின் காலடி தடம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்தனர்.
மேலும், வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் பரவியது. கடந்த, 2007 ல், லாரியின் மீது ஏறிய சிறுத்தைப்புலி ஓசூர் நகருக்குள் வந்தது. 2014 மே, 17 ல், சூளகிரி அடுத்த கானலட்டி கிராமத்தில் ஒரு வீட்டிற்குள் சிறுத்தைப்புலி புகுந்தது.
அதுபோன்ற சம்பவம் மீண்டும், ஓசூர் பகுதியில் நடந்து விட்டதோ என மக்கள் பீதியடைந்தனர். இதை அறிந்த ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர், அப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். இறுதியில், சிறுத்தையின் காலடி தடம் இல்லை என்பதை உறுதி செய்த வனத்துறையினர், அது காட்டு பூனையின் காலடி தடம் என கூறினர்.