வெண்டிலேட்டர் வசதியுடன் படுக்கைகளை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கோரிக்கை
ஓசூர் மாநகராட்சியில் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.;
ஓசூர் மாநகராட்சியில் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரியில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இச்சூழ்நிலையில், நோய் தொற்றை சமாளிக்கும் வகையில் மருத்துவத்துறையில் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை.
நோய் தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், மருத்துவமனைகளில் இட வசதி இன்றி தவிக்கும் நிலை உள்ளது. நோய் தொற்று ஆரம்ப அறிகுறி உள்ளவர்களை வீட்டிலேயே தனிமை படுத்திக் கொள்ள வலியுறுத்துகின்றனர். சிறிய அளவிலான வீட்டில் வசிப்பவர்கள் அதிகமாக உள்ள நிலையில் தனிமைப் படுத்திக் கொள்ள முடியாமல் அனைவருக்கும் தொற்று பரவி வருகிறது.
கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் வசதியுடன் கிருஷ்ணகிரியில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாநகராட்சியான ஓசூரில் இந்த வசதி இல்லை. தடுப்பூசியும் பற்றாக்குறையாக உள்ளது.
எனவே ஆரம்ப நிலையில் தொற்று கண்டறியப்பட்டவர்களை வட்ட அளவில் முகாம்களை அமைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஓசூர் மாநகராட்சியில் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.
தடுப்பூசி மருந்துகளை தேவையான அளவிற்கு அளித்து தாமதமின்றி தடுப்பூசி போட வேண்டும். பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தீவிர பிரசாரத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கூடுதலாக மருத்துவர்களையும், செவிலியர்களையும் பணியமர்த்தி ஆவண செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.