கர்நாடக மது அருந்தி இருவர் உயிரிழப்பு: பொதுமக்கள் சடலத்துடன் சாலை மறியல்
கர்நாடக மாநில மதுவை அருந்தி தொடர்ந்து இரண்டு பேர் உயிரிழந்ததால் பொதுமக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒன்னல்வாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட செந்தில் நகர் பகுதியில் தொடர்ந்து இரண்டு பேர் திடீரென மரணமடைந்தனர். கர்நாடக மதுவை அருந்தியதால்தான் இவர்கள் மரணமடைந்ததாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக இப்பகுதியில்கர்நாடக மாநில மது பாட்டில்களை ௨ பேர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த மதுவை வாங்கி குடித்துதான் இன்று சந்திரப்பா (34), நேற்று முன்தினம் அவரது உறவினர் பாபு ( 30 ) என்பவரும் உயிரிழந்தனர். இந்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் கர்நாடக மதுபான விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காவல் துறைக்கு பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரச்சனைகள் ஏற்படும்போதும், பொது மக்களிடம் பிரச்சனைகளை செய்ய வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொள்கிறார்களே தவிர, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே கர்நாடகா மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.