கர்நாடகாவிலிருந்து வரும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரம்

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2021-12-04 12:31 GMT

மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் மையம்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த இருவருக்கு ஓமிக்ரான் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

ஓமிக்ரான் நோய் பரவலை தடுக்க கர்நாடக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழகத்திலும் ஒமிக்ரான் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், மாநில எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு வரும் முக்கிய தரைவழி பாதையான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே நேற்று முதல் வருவாய்த்துறை காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மற்றும் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று 2-வது நாளாக ஜுஜுவாடி பகுதியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் வாகனங்களை தடுத்து நிறுத்தி நோய்த்தடுப்பு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்களில் வருவோர் தடுப்பூசி போட்டு கொண்டார்களா என்பதை விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளையும் அதிகாரிகள் சரி பார்த்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அல்லது முதல் தவணை மட்டுமே செலுத்தி கொண்டவர்களுக்கு மாநில எல்லையில் தடுப்பூசி செலுத்தும் மையம் அமைக்கப்பட்டு, அதில் ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கோவிசீல்டு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் நோக்கி தமிழகத்திற்குள் நுழைந்த ஒரு வாலிபர் இதுவரை எவ்வித தடுப்பூசியும் செலுத்தாததால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்துவேன் என தொடர்ந்து கூறி வந்ததால் அவரை அதிகாரிகள் திரும்பவும் கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News