தோட்டக்கலைத்துறை சார்பில் பசுமை குடில், காய்கறி சாகுபடி செய்ய மானியம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பசுமை குடில் அமைக்கவும், காய்கறி சாகுபடி செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது.;
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம், சூளகிரி, தளி, ஓசூர் வட்டாரங்களில் மலர் சாகுபடி அதிக பரப்பளவிலும் மற்றும் குறைந்த பரப்பளவிலும் உயர் தொழில்நுட்ப பசுமை குடியில் ரோஜா, ஜெர்பரா, கார்னேஷன் மலர்களும், குடை மிளகாய் மற்றும் வெள்ளரி போன்ற காய்கறிகளும் சாகுபடி செய்து வருகிறார்கள். இப்பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு விவசாயிகளும் அதிகபட்சமாக 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு பசுமை குடில் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளின் செலவினத்தை குறைக்கும் நோக்கம் இந்த ஆண்டு ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின்கீழ் எக்டருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தக்காளி மற்றும் முட்டைக்கோஸ் பயிருக்கு மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், அந்தந்த பகுதி உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலகம் அல்லது உதவி இயக்குநர் (தோட்டக்கலை) தளி - 8489457185, ஓசூர் - 9900பு70810, சூளகிரி - 7904856144, கெலமங்கலம் மற்றும் காவேரிப்பட்டணம் - 8098212580, பர்கூர் - 9894500374, கிருஷ்ணகிரி - 9952901906, வேப்பனஹள்ளி - 97862பு7220, மத்தூர் மற்றும் ஊத்தங்கரை - 9489156103 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு, தங்கள் விண்ணப்பதினை முன்பதிவு செய்து பயனடையுமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.